×

முதல்வர் வேட்பாளர் குறித்து எதிர்ப்பு எதிரொலி ஓபிஎஸ்சுடன் தம்பித்துரை திடீர் சந்திப்பு: எடப்பாடியுடன் சி.வி.சண்முகம் சந்திப்பால் பரபரப்பு

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், முன்னாள் எம்பி தம்பிதுரை நேற்று சென்னையில்  ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அதே நேரம் முதல்வருடன், அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று கடந்த 28ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில்  நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். 2017ம் ஆண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த 11 பேர்  கொண்ட வழிகாட்டு குழுவை அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்தார்.  இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்னை காரணமாக கடந்த 3 நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்த பரபரப்பான  சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக மூத்த  நிர்வாகியும் முன்னாள் எம்பியுமான தம்பிதுரை திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.  எடப்பாடி பழனிச்சாமியின் தூதுவராக சென்று பன்னீர்செல்வத்தை சந்தித்ததாக கூறப்பட்டது. ஆனால், அவர் தனிப்பட்ட உதவிக்காக சந்தித்ததாகவும்  கூறப்படுகிறது. தனிப்பட்ட சந்திப்பு முடிந்த பின்னர், அரசியல் பற்றி இருவரும் பேசியுள்ளனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை தம்பித்துரை  சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்காமல் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் சமரசம்  கிடையாது என்பதில் பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று மதியம் 12.30 மணிக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை, அடையார் கிரீன்வேஸ்  சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, “அதிமுக கட்சியையும், ஆட்சியையும் இருவரும் ஒற்றுமையாக  வழிநடத்தி செல்ல வேண்டும். அதேபோன்று, அதிமுகவில் தங்களது சமூகத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியதாக  கூறப்படுகிறது.



Tags : meeting ,Thambithurai ,CV Shanmugam ,OBC ,Edappadi , Echo of the opposition regarding the Chief Ministerial candidate Thambithurai sudden meeting with OBS: with Edappadi Excitement over meeting CV Shanmugam
× RELATED முதல்வர் குறித்து அவதூறு: விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜர்