152வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: காந்தியடிகளின் பிறந்தநாளை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு தமிழக கவர்னர், முதல்வர், துணை  முதல்வர், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.காந்தியடிகளின் 152வது பிறந்த நாள் விழாவையொட்டி சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று காலை  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, சரோஜா, துரைக்கண்ணு,  வெல்லமண்டி நடராஜன், பென்ஜமின், பாண்டியராஜன், எம்பி, எம்எல்ஏக்கள், வாரிய தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும், தன்னார்வலர்களும் காந்தி சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலைக்கு அருகே சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு  நிகழ்ச்சிகளில் கவர்னர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.கடந்த மூன்று நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாமல்  புறக்கணித்து வந்தார். ஆனால் நேற்று முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே வந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி வந்ததும் வணக்கம் தெரிவித்தார்.  ஆனால், இருவரும் இந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.

அதே நேரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கவர்னர் பன்வாரிலால்  புரோகித்துடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தனித்தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.இதையடுத்து, காமராஜரின் நினைவுநாளையொட்டி சென்னை, கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆகியோர்  மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>