×

தேர்தல் பிரசாரம் உச்சத்தை நெருங்கிய நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவிக்கு கொரோனா: பெண் உதவியாளரிடம் இருந்து தொற்றியது

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் 2வது முறையாக போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இருவரின் பிரச்சாரமும் கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டு வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் ஒரே மேடையில் நேருக்கு நேர் நின்று, விவாதம் செய்தனர். அப்போது, தனிப்பட்ட முறையிலும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப்பின் 31 வயதான பெண் உதவியாளரான ஹோப் ஹிக்சுக்கு 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் எப்போதுமே டிரம்ப், மெலனியாவுடன்தான் இருப்பார். இதனால், அவருடன் தொடர்பில் இருந்த டிரம்ப்பும், மெலனியாவும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில், இருவருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால், அதற்கான காய்ச்சல், சளி, இருமல் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல், இருவருமே உள்ளனர்.கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதாக அறிவித்துள்ளனர். டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எனக்கும், மெலனியாவுக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் உடனடியாக தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை நடைமுறைகளை தொடங்குகிறோம். நான் எனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கிறேன்,’ என கூறியுள்ளார். இதன் காரணமாக, டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, தனக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளதால், இந்தியர்களின் வாக்குகளை பெறுவதற்கான தீவிர முயற்சியில் அவர் ஈடுபட்டு வந்தார்.

பங்கு சந்தைகள் சரிவு
அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அமெரிக்க மற்றும் ஆசிய பங்கு சந்தைகள் சரிவடைந்தன.  எண்ணெய் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசிய வர்த்தகம் மந்தமாக காணப்பட்டது. ஷாங்காய், ஹாங்காங் சந்தைகள் மூடப்பட்டன. தொழில்நுட்ப  காரணங்களால் ஒரு நாள் முழுவதும் செயல்படாத நிலையில் டோக்கியோ பங்கு சந்தை நேற்று மீண்டும் வர்த்தகத்தை தொடங்கியது. முதலில்  உயர்வுடன் தொடங்கிய நிக்கி குறியீட்டு எண் 225 பின்னர் 0.8 சதவீதம் இழந்து 22,999.75 ஆக இருந்தது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து,  இந்தோனேஷியாவிலும் பங்கு சந்தைகள் சரிந்தன.

மாஸ்க் போட்டவருக்கே வந்துடுச்சே...
உலகளவிலான கொரோனா பாதிப்பு, பலியில், அமெரிக்காதான் முதலிடம் வகிக்கிறது. அப்படி இருந்தும், டிரம்ப் பல மாதங்களாக மாஸ்க்  அணியாமல்தான் பொது இடங்களில் சுற்றி வந்தார். நாட்டின் அதிபரே இப்படி நடந்து கொள்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், சமீப  காலமாகதான் பொது இடங்களில் டிரம்ப் மாஸ்க் அணிகிறார். தனது உதவியாளர் ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதித்தது பற்றி பாக்ஸ் டிவி.க்கு  டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘அவர் எப்போதுமே மாஸ்க் அணிந்திருப்பவர். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அதனால், மக்கள்  உஷாராக இருக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

மோடி விருப்பம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப், மெலனியா விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எனது நண்பர் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் விரைவில் குணமடைய வேண்டும்  மற்றும் ஆரோக்கியத்தை பெற வேண்டும் என விரும்புகிறேன்,’ என கூறியுள்ளார்.

Tags : election campaign ,Trump ,US ,aide , As the election campaign nears its climax US President Trump, Corona to wife: Infected from female assistant
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...