×

வெள்ளை மாளிகையை தாக்கிய கொரோனா: அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி.!!!

வாஷிங்டன்: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 3 கோடியே 44 லட்சத்து 65 ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 77 லட்சத்து 84 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 56 லட்சத்து 53 ஆயிரத்து 812 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்து 27 ஆயிரத்து 054 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரம், கிளீவ்லேண்டில் நடந்த பிடன் உடனான விவாதம், மினசோட்டாவில் நடந்த பிரசார பேரணி ஆகியவற்றில் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் உடன் டிரம்ப் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்; ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டிரம்பிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு அவர் பிரச்சாரம் செய்வது தடைப்பட்டுள்ளது. இது அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


Tags : Trump ,Corona ,Melania ,White House ,US , Corona attacks White House: US President Trump and his wife Melania have been diagnosed with corona infection !!!
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்