தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு கிராமத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 350க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு வளாகம், தோட்டம், விளையாட்டு மைதானம், குடிநீர் தொட்டி, விருந்தினர் தங்கும் அறைகள், ஜிம், வணிக வளாகம் ஆகியவற்றை பராமரிக்க அதே பகுதியை சேர்ந்த பெண்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இந்நிலையில் ஏற்கெனவே ஒப்பந்தம் எடுத்திருந்த நிறுவனம், விலகியதையடுத்து நேற்று முதல் புதிய நிறுவனம் இந்த வேலைகளை எடுத்து நடத்த தொடங்கியது. இதையொட்டி, நேற்று காலை ஊழியர்கள் வேலைக்கு சென்றபோது 8 பேர் மட்டுமே உள்ளே அனுப்ப முடியும். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என பாதுகாவலர்கள் கூறி தடுத்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த மொத்த ஊழியர்களும் அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே இருந்தவர்கள் வெளியே செல்ல முடியாமலும், வெளியே இருந்தவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதையடுத்து குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை ஏற்காமல், ஊழியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், சிஐடியூ நிர்வாகிகள் லிங்கம், நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்வம், திருப்போரூர் போலீசார் அங்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில், உடன்பாடு ஏற்பட்டது. அதில், அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும். சம்பளம் குறித்து பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

Related Stories:

>