×

திருப்பூரில் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளி கூட்டு பலாத்காரம் ஆன்மீக பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமை நாடாக மாறிவிட்டது: சென்னை உயர் நீதிமன்றம் வேதனை

சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஆன்மீக பூமியான இந்தியா பாலியல் வன்கொடுமை நிலமாக நாடு மாறியுள்ளது என்றும் வேதனை தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது, மகாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை மீட்க கோரி வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான விவகாரங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என மத்திய, மாநில மத்திய அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி, ‘‘ திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த பெண் தொழிலாளி கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரை பலாத்காரம் செய்தவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் தலைமறைவாக உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை வசதியும் செய்து தரப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும். உரிய இழப்பீட்டை வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க  தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இதைக்கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரக்கட்டுப்பாடும் இல்லை, உரிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பாதுகாப்பும் இல்லை. புனித பூமி என கருதப்படும் இந்திய நாட்டில் 15 நிமிடத்திற்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை. ஆன்மீக பூமியாக இருந்த நம் நாடு பாலியல் வன்கொடுமைக்கான நாடாக மாறியுள்ளது. இது துரதிஷ்டவசமானது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் சம்பவம் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. கண்காணிப்பில் விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : rape ,India ,country ,Tirupur ,Chennai High Court , Collective rape of female migrant worker in Tiruppur has turned spiritual land India into a country of sexual violence: Chennai High Court tormented
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!