திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்லக்கூடிய அலிபிரி மலைப்பாதை புனரமைப்பு தொடக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப திருப்பதியில் இருந்து திருமலைக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அதன்படி, கொரோனா ஊரடங்கிற்கு முன் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை அலிபிரி மலைப்பாதை வழியாக பாதயாத்திரை சென்று வந்தனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கோயிலில் 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய டிக்கெட் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் ஆயிரத்திற்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு பாத யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அலிபிரி மலைப்பாதையில் வெயில் மற்றும் மழையில் பக்தர்கள் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்ட நிழல் பந்தல் அனைத்தும் தற்போது சேதமடைந்து மழைபெய்தால் தண்ணீர் கசிவு ஏற்படும் நிலையில் உள்ளது. இதனால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ₹25 கோடியில் நிழல் பந்தலை புனரமைக்க முடிவு செய்தது. இதற்கான செலவு அனைத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் முழுவதுமாக ஏற்பதாக தெரிவித்தது.

இதையடுத்து, தற்போது அலிபிரி மலைப்பாதை புனரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி, சேதமடைந்த நிழல் பந்தல்கள் இடிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. 6 மாதத்திற்குள் இந்த பணிகளை நிறைவு செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>