எப்போது வேண்டுமானாலும் நகருக்குள் நுழையலாம்: கொடைக்கானலை மிரட்டும் கொம்பன்: பொதுமக்கள், வியாபாரிகள் பீதி

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே உள்ள குறிஞ்சிநகர் விவசாய தோட்டப்பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஒற்றை காட்டு யானை நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது குறிஞ்சிநகர் பகுதி. இங்கு வாழை,  உருளை கிழங்கு, காரட் ஆகியவை பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் பல வருடங்களுக்கு பிறகு திடீரென ஒற்றை கொம்பன் யானை நுழைந்து விவசாய நிலத்தை சேதப்படுத்தியுள்ளது. இந்த விவசாய நிலங்களில் உள்ள வாழை மரங்களை சாய்த்தும், தண்ணீர் தொட்டியை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து அறிந்த கொடைக்கானல் வனத்துறையினர் ஒற்றைக் கொம்பன் யானை சேதப்படுத்திய விவசாய நில  பகுதிகளை பார்வையிட்டனர்.  பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியில் யானை வந்தது அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க மின் வேலி அமைத்தும்,  உரிய இழப்பீடும்  வழங்க வேண்டும் என  குறிஞ்சி நகர் விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த குறிஞ்சிநகர் கொடைக்கானல் நகர் பகுதிக்கு மிக அருகில் உள்ள பகுதியாகும். எனவே கொடைக்கானல் நகர் பகுதியை நெருங்கி உள்ள ஒற்றை கொம்பன் யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கொடைக்கானல் பொதுமக்களும் குறிஞ்சிநகர் கிராம விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் நகருக்குள் இந்த ஒற்றைக் கொம்பன் யானை எப்போது வேண்டுமானாலும் வரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Related Stories:

>