உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் சுதந்திரமாக உலாவுகின்றனர்..பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மாயாவதி கடும் தாக்கு!!

லக்னோ : உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி வலியுறுத்தியுள்ளார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் அண்மையில், ஹத்ராஸில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயத தலித் பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் அந்த மாநிலத்தில் ஹத்ராஸ் பெண்ணுக்கு நேர்ந்தது போலவே மற்றொரு பெண்ணுக்கும் நேர்ந்துள்ளது. பல்ராம்பூர் பகுதியை சேர்ந்த 22 வயதான பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். பல்ராம்பூரில் நடந்த பலாத்கார சம்பவம் மற்றும் கொலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கண்ட 2 சம்பவங்கள் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், உத்தரப்பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேசத்தில் காட்டாட்சி நடைபெறுகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, உ.பி.யில் பெண்களைப் பாதுகாக்கத் தவறியதால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். பாஜக தலைமையிலான உத்தரபிரதேச அரசின் கீழ் குற்றவாளிகள், மாஃபியாக்கள் மற்றும் கற்பழிப்பாளர்கள் சுதந்திரமாக உலாவுகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள மக்கள், இந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர், அனைத்து வகையான குற்றங்களும் இந்த மாநிலத்தில் அதிகரித்துள்ளது, உ.பி.யின் மகள்கள் எவரும் பாதுகாப்பாக இல்லை..குறிப்பாக தலித் சமூகத்திலிருந்து வரும் சிறுமிகள் பாதுகாப்பாக இல்லவே இல்லை. யோகி ஆதித்யநாத் அவர்களும் ஒரு பெண்ணால் பெற்றெடுக்கப்பட்டீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன், மற்ற பெண்களையும் அவரது சொந்த மகள்களாக நடத்த முயல வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இயலவில்லை என்றால், முதல்வர் பதவியை யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும். யோகி ஆதித்யநாத்தை அவரது இடமான கோரக்நாத் கோயிலுக்கு அனுப்ப வேண்டும். அவர் கோயிலில் இருப்பதை விரும்பவில்லை என்றால் ராம் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>