×

மயானத்திற்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயலில் இறங்கி சுமந்து செல்லும் அவலம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே மயானத்திற்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை வயல் வழியாக சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உமையாள்பதி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு விநாயக்குடி கிராமத்தில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் இவர்களுக்கான மயானம் வயல்வெளி மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. மெயின்ரோட்டில் இருந்து சிறிதுதூரம் சென்றதும் 1 கிலோ மீட்டர் தூரம் விளைநிலங்களில்தான் இறந்தவர்கள் சடலத்தை தூக்கி செல்ல வேண்டும். இந்நிலையில் நேற்றுமுன்தினம் தெற்கு விநாயககுடியை சேர்ந்த நாகையன் (70 ) என்பவர் உடல் நலம் குன்றி இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கு விளைநிலங்களில் சேற்றில் இறங்கி சிரமத்துடன் சுமந்து சென்று அடக்கம் செய்தனர். சாலை வசதி இல்லாததால் மழைகாலங்களில் விளைநிலங்களில் உடலை தூக்கிசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சேறும் சகதியுமாக இருக்கும் வயலில் சாதாரணமாக நடந்து செல்வதே கஷ்டமான விஷயம். அதில் இறந்தவர் சடலத்தை தூக்கி கொண்டு செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் மயானத்திற்கு செல்ல சாலை வசதி செய்துதரவில்லை. கிராம மக்களின் நலன் கருதி தெற்கு விநாயககுடி மயானத்திற்கு செல்ல சாலை வசதி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : deceased ,cemetery , Kollidam, Mayana Road
× RELATED வேஷ்டியை கழற்றி ரகளை அமமுக ஒன்றிய செயலர் கைது