கொல்கத்தா அபார பந்துவீச்சு ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி

துபாய்: ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அபார பந்துவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 2 அசத்தல் வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது 3வது லீக் ஆட்டத்தில் நேற்று நைட் ரைடர்சை சந்தித்தது. டாஸ் வென்ற ராயல்ஸ் கேப்டன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில், சுனில் நரைன் களமிறங்கினர். முதல் போட்டியில் 9 ரன் எடுத்த நரைன், 2வது போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்திருந்தாலும், கொல்கத்தா அணி அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுத்தது.

ஆனால், வாய்ப்பை நரைன் வீணடித்தார். அவர் 15 ரன் மட்டுமே எடுத்து உனத்கட் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து கில்லுடன் நிதிஷ் ராணா இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தது. ராணா 22 ரன் எடுத்து (17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) திவாதியா பந்துவீச்சில் பராக் வசம் பிடிபட்டார். அரை சதத்தை நெருங்கிய கில் 47 ரன் எடுத்து (34 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஆர்ச்சர் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்த ராணா, கில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது நைட் ரைடர்சுக்கு பின்னடைவை கொடுத்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 ரன் மட்டுமே எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் விக்கெட் கீப்பர் பட்லர் வசம் பிடிபட்டார். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.

இந்நிலையில், அதிரடி வீரர்கள் ரஸ்ஸல், மோர்கன் இருவரும் இணைந்து கொல்கத்தா ஸ்கோரை உயர்த்தினர். 3 இமாலய சிக்சர்களை பறக்கவிட்டு மிரட்டிய ரஸ்ஸல் 24 ரன் எடுத்து (14 பந்து) ராஜ்பூத் பந்துவீச்சில் உனத்காட் வசம் பிடிபட்டார்.

கம்மின்ஸ் 12 ரன் எடுத்த நிலையில், டாம் கரன் பந்துவீச்சில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். கேகேஆர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. மோர்கன் 34 ரன் (23 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), நாகர்கோட்டி 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சர் 4 ஓவரில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ராஜ்பூத், உனத்காட், கரன், திவாதியா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல்ஸ் களமிறங்கியது. பட்லர், கேப்டன் ஸ்மித் இருவரும் துரத்தலை தொடங்கினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். 2வது ஓவரில் ஸ்மித் (3) விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்த அடுத்தடுத்து விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல சரிந்தன. சஞ்சு சாம்சான் (8), ஜோஸ் பட்லர் (21) இருவரையும் சிவம் மாவி வெளியேற்றினார். உத்தப்பா (2), பராக் (1) இருவரும் நாகர்கோட்டி பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால், 42 ரன்னில் 5 விக்கெட் பறிபோன நிலையில், திவாதியா கடந்த போட்டியைப் போல் இம்முறையும் ஏதேனும் மாயாஜாலம் நிகழ்த்துவாரா என ராஜஸ்தான் ரசிகர்களின் எதிர்பார்த்தனர்.

ஆனால், 14 ரன் மட்டுமே சேர்த்த திவாதியா வருண் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்தவர்களில் டாம் கரன் மட்டும் போராடி ரன் சேர்த்ததால், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 100 ரன்களையாவது கடந்தது. மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.  கரன் 35 பந்தில் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. கரன் 54, ராஜ்பூத் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் சிவம் மாவி, நாகர்கோட்டி, வருண் தலா 2 விக்கெட்டும், கம்மின்ஸ், குல்தீப், நரைன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Related Stories:

>