மேடவாக்கத்தில் பயங்கரம் லோடு வேன் டிரைவர் சரமாரி வெட்டிக் கொலை: தனிப்படை விசாரணை

வேளச்சேரி: மேடவாக்கத்தில் லோடு வேன் டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேடவாக்கம், சிபிஐ காலனி விரிவு பகுதியில் உள்ள வயல்வெளியில் சுமார் 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலை, கழுத்து பகுதியில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் சிலர் நேற்று காலை தகவல் கொடுத்தனர். இதையடுத்து, மவுண்ட் போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன் மற்றும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். இதில், கொலை செய்யப்பட்டு கிடப்பவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரித்தனர். இந்நிலையில், சென்னை மவுண்ட்டிலிருந்து போலீஸ் மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. அது சடலத்தின் அருகே இருந்து நேராக மேடவாக்கம், ரங்கநாதபுரம், பட்டேல் சாலையில் உள்ள குமார் என்பவர் வீட்டின் முன் சென்று நின்றது. இதையடுத்து, போலீசார் அங்கு விசாரித்ததில் இறந்து கிடந்தவர் குமாரின் மகன் டில்லிபாபு (23) என்பதும், லோடு வேன் டிரைவர் என்பதும் தெரியவந்தது.

நேற்று காலை 7.30 மணி அளவில் டில்லிபாபு வீட்டைவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு யாரோ மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து சென்று தலை, கழுத்தில் கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது. இந்த கொலை குறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்தனர். அதில், 2017ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிலருடன் டில்லிபாபு அடிதடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சிலருடன் சண்டை நடந்துள்ளது. அந்த நபர்களிடம் விசாரணை நடத்த போலீசார் தேடி செல்லும்போது, அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்தால்தான் கொலைக்கான முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

>