பாலியல் பலாத்காரத்தால் கொடூரமாக பலியான இளம்பெண் சடலம் இரவோடு இரவாக எரிப்பு: குடும்பத்திடம் கூட சொல்லாமல் உபி போலீசார் அதிரடி அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள் கொந்தளிப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து இளம்பெண்ணின் சடலத்தை, குடும்பத்தினரிடம் சொல்லாமல் இரவோடு இரவாக இம்மாநில போலீசார் எரித்து விட்டனர். இதனால், பெரும் கொத்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 14ம் தேதி தனது தாயுடன் சென்ற போது, உயர் வகுப்பை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு உடலில் பலத்த காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் கந்தல் கோலத்தில் கண்டெடுக்கப்பட்டார். அந்த பெண் அலிகாரில் உள்ள ஜேஎன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்பு, முதுகெலும்பு மிகவும் பாதிக்கப்பட்டதால் 28ம் தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சித்தலைவர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமே எதிர்ப்பு தெரிவித்தும், உத்தர பிரதேச மாநில போலீசார் இளம் பெண்ணின் குடும்பத்தினரின் சம்மதத்தையும் பெறாமல், அவர்களிடம் சடலத்தை ஒப்படைக்காமல் அதிகாலை 2.30 மணிக்கு எரித்து விட்டனர். போலீசாரின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் இடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில், `உத்தர பிரதேச மாநில போலீசார் அப்பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல், அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இறந்த நாளிலேயே இறுதி சடங்குகளை செய்திருப்பது சந்தேகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது. போலீசாரின் இந்த தவறான அணுகுமுறையை பகுஜன் சமாஜ் வன்மையாக கண்டிக்கிறது,’ என்றார். சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ``இளம்பெண் இறந்த நள்ளிரவிலேயே, குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் இறுதி சடங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. சாட்சியங்களை அழிக்கும் இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. இதன் மூலம், பாஜ அரசு பாவமும், குற்றமும் செய்துள்ளது,’’ என்றார். இதுதவிர, பல்வேறு கட்சித் தலைவர்களும், பெண்கள் அமைப்புகள் இதை கடுமையாக கண்டித்துள்ளன.

* இறுதிச் சடங்கு செய்யும் உரிமை கூட இல்லையா?

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட டிவிட்டரில், `பாதிக்கப்பட்ட பெண்ணை பாதுகாப்பதற்கு பதிலாக, அவர் இறந்த பின்னும் அவருடைய தனிமனித உரிமைகளை பறிப்பதற்கு யோகியின் அரசு உடந்தையாக இருந்துள்ளது. உங்களுக்கு முதல்வராக தொடரும் தார்மீக உரிமை இல்லை,’ என்று கூறியுள்ளார். காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவரது டிவிட்டர் பதிவில், `இளம் பெண்ணின் இறுதிச்சடங்கை கூட, அவரது குடும்பத்தினர் விரும்பியபடி நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் அந்த உரிமையும் பறிக்கப்பட்டு விட்டது,’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு

உத்தர பிரதேச முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `பிரதமர் மோடி அவர்கள், ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து முதல்வர் யோகியுடன் தொலைபேசியில் நேற்று பேசினார். அப்போது, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்,’ என்று கூறப்பட்டுள்ளது.

* சிறப்பு விசாரணை குழு

இளம்பெண் பாலியல் பலாத்கார, கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க, உபி மாநில உள்துறை செயலாளர் பகவான் ஸ்வரூப் தலைமையில், டிஐஜி சந்திர பிரகாஷ், ஆக்ரா மாநில ஆயுதப்படை கமாண்டர் பூனம் உள்ளிட்ட 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார். இந்த சிறப்பு குழு 7 நாட்களில் தனது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories:

>