காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மீண்டும் உற்சவம் தொடங்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் மீண்டும் உற்சவம் தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையொட்டி, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவிடம், காஞ்சி காமாட்சி அம்மன் விஸ்வரூப தரிசன சபா டிரஸ்ட் அமைப்பு செயலாளர் குமார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரத்தில் கடந்த 6 மாதங்களாக கொரோனா பரவலால்,கோயில்களில் உற்சவங்கள் நடக்கவில்லை. காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயிலில், தூப்புல் வேதாந்த தேசிகன் புரட்டாசி பிரம்மோற்சவம் உள்பட அனைத்து உற்சவங்களும் கோயிலுக்கு உள்ளேயே நடந்தன.

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, தமிழ் மாத பிறப்பு ஆகிய தினங்களில் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து வெளியில் வந்து சிறிது தூரம் சென்று திரும்பி, பின்னர் கோயிலுக்கு உள்ளேயே தங்கரத புறப்பாடு நடக்கும். இதேபோல், குமரகோட்டம் முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வெள்ளிரத புறப்பாடு, கிருத்திகையில் நான்கு ராஜவீதி புறப்பாடும் நடக்கும். இந்த உற்சவங்கள் கடந்த 6 மாத காலமாக நடக்காததால், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, விளக்கொளி பெருமாள் கோயிலுக்கு அனுமதி அளித்தது போல், அனைத்து கோயில்களிலும் மீண்டும் பழையபடி உற்சவங்கள் நடத்த அனுமதி அளிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>