×

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் மறைவு அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: ராமகோபாலன் மறைவு பற்றி அறிந்து வருத்தப்படுகிறேன். அவரது மறைவு தமிழக மக்களுக்கும் குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் இந்து முன்னணியைப் பின்பற்றுபவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். குடும்பத்தில் துயரமடைந்துள்ள உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: இந்து முன்னணியின் நிறுவன தலைவர் ராமகோபாலன் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டதோடு, இந்த முன்னணி இயக்கத்திற்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். அவரை இழந்து வாடும் அவரது இயக்க தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சிந்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், முத்தமிழறிஞர் கலைஞரும், பெரியவர் ராம கோபாலனும் நல்ல நண்பர்களே. அவர்களிடையே இருந்த பரஸ்பர நன்மதிப்பு, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் கண்ணியம், பண்பாடு மற்றும் பக்குவம் நிறைந்த நட்புணர்வு ஆகியவற்றை நான் அறிவேன். அந்தக் ‘கொள்கைச் சுதந்திரம்’ இருவரின் நட்புணர்வில் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை. ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான அவரது மறைவு பேரிழப்பாகும்.

தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன்: வீரத்துறவி ராமகோபாலன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன்(94) உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

பாஜ தலைவர் எல்.முருகன்: மூத்த ஆர்எஸ்எஸ் பிரச்சாரகரும், இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவருமான வீரத்துறவி ராமகோபாலன் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  

பாமக நிறுவனர் ராமதாஸ்: இந்து மதம் மீதும், அதன் நம்பிக்கைகள் மீதும் பற்று கொண்ட அவர் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அவற்றை பரப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். அவர் கொண்ட கொள்கைகளில் சமரசமின்றி செயல்பட்டு வந்தவர். அவரை இழந்து வாடும் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: ஆன்மீகப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர், ராம கோபாலன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். இதேபோன்று இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர், சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : leaders ,Ram Gopalan ,death , Political leaders mourn the death of Hindu Front leader Ramagopalan
× RELATED உள்ளூர் பொருட்களுக்கு...