×

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்

சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் (94), உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். ராமகோபாலன் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 26-ம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  கொரோனா பாதிக்கப்பட்டதிலிருந்து மீண்டு, சிகிச்சைப்பெற்று வந்த ராம கோபாலனுக்கு மீண்டும் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக சிந்தாதரிப்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது. அஞ்சலி செலுத்திய பின் திருச்சியில்  அடக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்துத்துவ இயக்கங்களின் மூத்த தலைவரும், முன்னோடியுமான ராமகோபாலன் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்தார். ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை இவர் தலைமையேற்று நடத்துவது வழக்கம். 1980ம் ஆண்டுகளில் குமரி மாவட்டம் மண்டைக்காடு மதக் கலவர நிகழ்வுகளின் போது இந்து முன்னணி என்ற  இவரது அமைப்பு பரவலாக கவனம் பெற்றது. கடந்த ஆகஸ்டு மாதமும் இராம.கோபாலன் மூச்சுத்திணறல் காரணமாக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.

Tags : Ramagopalan ,Front , Hindu Front founder Ramagopalan has passed away
× RELATED போலீஸ் பாதுகாப்புக்காக பொய் புகார் இந்து முன்னணி பிரமுகர் கைது