5ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு: அக்.15 முதல் தியேட்டர்கள் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு நேற்றுடன் முடிந்த நிலையில், 5ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், வரும் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள், பொழுதுப் போக்கு பூங்காக்கள், கல்வி நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 26ம் தேதி முதல் கட்ட ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அது முடிந்த நிலையில், அடுத்தடுத்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அவர் நீட்டித்து வந்தார். இதுவரையில் அவர் 8 முறை ஊரடங்கை நீட்டித்து இருக்கிறார். இன்று முதல் 31ம் தேதி வரை 9ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், அடுத்தடுத்து ஊரடங்கு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, நேற்று 5ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

நேற்று அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் விவரம் வருமாறு: கல்வி நிலையங்கள்

* பள்ளிகள், கல்லூரிகள் அக்டோபர் 15ம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் தங்களின் விதிகளுக்குட்பட்டு உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கலாம்.

* விருப்பத்துக்கு ஏற்றார்போல் தொலைதூரக் கல்வி, இணைய வழிக்கல்வியைத் தொடரலாம்.

*  இணைய வழிக் கல்வியைப் போலவே, மாணவர்கள் வகுப்பில் நேரடியாகப் பங்கேற்க விரும்பும்பட்சத்தில் வகுப்புகளும் தொடங்க அனுமதி உண்டு.

* மாணவர்கள் கல்வி நிலையங்களில் நேரடி வகுப்பில் பங்கேற்க பெற்றோர் அனுமதி அவசியம்.

* வருகைப் பதிவேடு முறையில் தளர்வுகளைக் கடைபிடிக்க வேண்டும். வகுப்பில் கலந்து கொள்வது கட்டாயம் அல்ல.

*  உரிய பயிற்சியாளர்களைக் கொண்ட நீச்சல் குளங்களுக்கும் அக்டோபர் 15ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

பொழுது போக்குகள்

* திரையரங்குகள், மல்ட்டிபிளெக்சுகள்,

பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை அக்டோபர் 15ம் தேதி முதல் செயல்படலாம்.

* திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

* தடை செய்யப்பட்ட பகுதிகளில் தியேட்டர்களை திறப்பது உட்பட மேற்கண்ட எதற்கும்  அனுமதியில்லை.

பொது நிகழ்ச்சிகள்

* வர்த்தக நிறுவனங்களின் கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகளை உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம்.

* சமூகம், கல்வி, கலை, விளையாட்டு, கலாசாரம், மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே 100 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட அனுமதி தொடர்கிறது.

* தடை செய்யப்பட்ட பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் முடிவு செய்யலாம்.

* மூடப்பட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 50 சதவிகிதம் வரை பங்கேற்கலாம். அதிகபட்சமாக 200 பேர் வரை கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது.

* திறந்த வெளி மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இடத்தைப் பொறுத்து ஆட்கள் பங்கேற்கலாம்.

* விமானப் பயனங்களை வழக்கமான விதிமுறைகளுடன் தொடரலாம். சர்வதேச விமானப் பயணங்களில் சுகாதார அனுமதி வழக்கம்போல் அவசியம்.

* கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல்நலக்குறைவாக உள்ளவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தபடுகிறார்கள். அவசியமெனில் மட்டுமே பாதுகாப்புடன் பயணிக்கவும்.

* மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய தடைகள் ஏதுமில்லை.

மாநிலங்களுக்கு கட்டுப்பாடு

* தடை செய்யப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31ம் தேதி வரையிலும் ஊரடங்கு தொடரும்.

* மத்திய அரசின் அனுமதியின்றி உள்ளூர் ஊரடங்கை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தன்னிச்சையாக பிறப்பிக்கக் கூடாது.

மத்திய அரசு செயல் பற்றி கல்வியாளர்கள் கேள்வி

‘மக்கள் அதிகளவில் கூடக்கூடிய திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கல்வி நிலையங்களை திறப்பது பற்றி மட்டும் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று அது கூறியிருக்கிறது. தியேட்டர்கள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கும் மத்திய அரசு, கல்வி நிலையங்களை திறக்கும் பொறுப்பை மட்டும் மாநில அரசுகளின் தலையில் கட்டி விடுவது ஏன்?’ என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories:

>