×

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட அனைவரும் விடுதலை: குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை’

* 28 ஆண்டுகளுக்கு பிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

லக்னோ: கடந்த 28 ஆண்டுகளாக நடந்து வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றம்சாட்டப்பட்ட பாஜ மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேரும் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார். நீதிபதி தனது 2,300 பக்க தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லை என கூறியுள்ளார். அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறையில் 2,000 பேர் பலியாயினர்.

பாபர் மசூதியை இடிக்கத் தூண்டியதாக பாஜ கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங், வினய் கத்தியார், விஎச்வி தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உள்ளிட்ட 17 பேர் வழக்கு விசாரணையில் இருந்தபோது உயிரிழந்தனர். இந்த வழக்கில் கடந்த 2001ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. இதனை 2010ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால், 2017ம் ஆண்டு சதி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டில் தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக எஸ்.கே.யாதவ் நியமிக்கப்பட்டு, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நாள்தோறும் விசாரணை நடந்து வந்தது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் சிறப்பு நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர். சிபிஐ தரப்பில் 351 சாட்சியங்கள், 600 பக்க ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பலமுறை தீர்ப்பு வழங்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 30ம் தேதி இறுதி தீர்ப்பை அறிவிக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. இதன்படி, 28 ஆண்டுகால அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

லக்னோ நீதிமன்றத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.  குற்றம்சாட்டப்பட்டவர்களில் 26 பேர் தங்களின் வக்கீல்களுடன் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகி இருந்தனர். வயது மூப்பு காரணமாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆஜராகவில்லை. உமா பாரதி, கல்யாண் சிங் இருவரும் கொரோனா பாதிப்பால் ஆஜராகவில்லை.
பிற்பகல் 12.10 மணிக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி யாதவ் வந்தார். 2,300 பக்க தீர்ப்பை தாக்கல் செய்த அவர் அடுத்த 5 நிமிடத்தில் வழக்கின் முக்கிய சாரசம்சத்தை மட்டும் வாசித்து முடித்தார். இதில், குற்றம்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி உட்பட 32 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க, உறுதியான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. பெயர் கூறப்படாத பல்லாயிரக்கணக்கான கரசேவகர்கள் பாபர் மசூதி இடிப்பில் பங்கு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சதி நடந்ததாக கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை. இதில் பத்திரிகை செய்தி, படங்களை ஆதாரங்களை ஏற்க முடியாது. அதிலும், பத்திரிகைகளின் அசல் தாக்கல் செய்யப்படவில்லை. வீடியோ கேசட்களும் சீலிடப்படாமல் உள்ளன. அவைகளும் தெளிவான வீடியோக்களை கொண்டிருக்கவில்லை. மறைந்த விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களை தடுக்கவே முயற்சித்துள்ளார். ஏனெனில், மசூதிக்குள் ராமரின் சிலை இருப்பதால் அதை காப்பதற்காக மசூதி இடிப்பதை தடுக்க முயன்றுள்ளார்.

எனவே, பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி அல்ல; தற்செயலாக நடந்த சம்பவம். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சான்றுகள் மூலம் உறுதி செய்யப்படாத காரணத்தினால், அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இவ்வாறு நீதிபதி தீர்ப்பு அளித்தார். தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நீதிமன்றத்தில் இருந்த சிலர் ‘ஜெய் ராம்’ என கோஷமிட்டனர். இந்த தீர்ப்பை அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதன் மூலம், 28 ஆண்டு கால வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

351 சாட்சிகள், 600 ஆதாரங்கள் ; 2,000 பேரை பலி வாங்கிய சம்பவம்
* நீதிபதி எஸ்.கே.யாதவ் 2,300 பக்க தீர்ப்பை அளித்தார்.
* சிபிஐ தரப்பில் 351 சாட்சியங்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
* வழக்கிற்கு ஆதாரமாக 600 ஆவணங்களை சிபிஐ தாக்கல் செய்தது.
* 2,000 பேரை பலி வாங்கிய சம்பவம்
* 1992, டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நடந்த வன்முறைகளில் நாடு முழுவதும் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
* பாஜ மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உட்பட 49 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
* சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உள்ளிட்ட 17 பேர் வழக்கு விசாரணையின் போது இறந்தனர்.

எனக்கு கிடைத்துள்ள மற்றொரு பாக்கியம்
லக்னோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத 92 வயதான அத்வானி தனது வீட்டில் குடும்பத்தினருடன் அமர்ந்து டிவி.யில் தீர்ப்பு விவரத்தை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். அனைவரும் விடுவிக்கப்பட்ட தீர்ப்பு வெளியானதும், அவர் ‘ஜெய் ராம்’ என கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘எனது தனிப்பட்ட மற்றும் பாஜ.வின் நம்பிக்கையையும், ராம ஜென்ம பூமி மீதான அர்ப்பணிப்பையும் இந்த தீர்ப்பு பிரதிபலிக்கிறது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயிலை காணும் எனது நீண்டகால கனவுக்கு வழி வகுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, இது எனக்கு கிடைத்துள்ள மற்றுமொரு பாக்கியமாக கருதுகிறேன்.

அயோத்தி இயக்கத்திற்காக தன்னலமற்ற ஈடுபாடு மற்றும் தியாகத்துடன் எனக்கு பலத்தையும் ஆதரவையும் அளித்த கட்சி தொண்டர்கள், தலைவர்கள் அனைவருக்கும் நன்றி உள்ளவனாக இருப்பேன்,’’’ என்றார். இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என முரளி மனோகர் ஜோஷி வரவேற்றுள்ளார்.

நாடு முழுவதும் பாதுகாப்பு
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, 28 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்ததால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. லக்னோ நீதிமன்றத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். முக்கிய வழிபாட்டு தலங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

26 பேர் மட்டுமே நேரில் ஆஜர்
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுபடி 26 பேர் மட்டுமே தங்களின் வக்கீல்களுடன் நேரில் ஆஜராகினர். வயது மூப்பு காரணமாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆஜராகவில்லை. உமா பாரதி, கல்யாண் சிங் இருவரும் கொரோனா பாதிப்பால் ஆஜராகவில்லை.

இரு முக்கிய வழக்குகள்
அயோத்தி பாபர் மசூதியை மையமாகக் கொண்டு இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்று சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான சிவில் வழக்கு. இன்னொன்று, மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளவர்கள் மீதான கிரிமினல் வழக்கு.
சிவில் வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில், அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி தந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோயில் அமைக்கும் பணியை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதையடுத்து, கிரிமினல் வழக்கிலும் நேற்று அனைத்து பாஜ தலைவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உண்மை, நீதியின் வெற்றி
பாஜ மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தனது டிவிட்டரில், ‘இந்த தீர்ப்பு தாமதமாக இருந்தாலும், நீதி வென்றுள்ளது,’ என்றார். மற்றொரு பாஜ தலைவர் ராம் மாதவ், ‘உண்மை வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் இந்த தீர்ப்பு நீண்ட காலதாமதமானது,’ என கூறி உள்ளார். இதே போல், பல பாஜ தலைவர்கள் தீர்ப்பை முழுமையாக வரவேற்றுள்ளனர். விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் கூறுகையில், ‘‘இந்த தீர்ப்பு உண்மை, நீதியை நிரூபிப்பதாகும். கடந்த காலத்தை எண்ணிப் பார்ப்பதற்கு பதிலாக, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை எதிர்நோக்கி ஒற்றுமையாக பணியாற்ற வேண்டிய நேரம் இது,’’ என்றார்.

மறக்கப்பட வேண்டும்
சிவசேனா எம்பி சஞ்சய் ராத் கூறுகையில், ‘‘ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தனது தொடர்பை இழந்தது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இது எதிர்பார்க்கப்பட்டதே. பாபர் மசூதி இடிக்கப்படாவிட்டால், ராமர் கோயில் கட்டுவது சாத்தியமாகி இருக்காது. ஆனால், இப்போது மசூதி இடிக்கப்பட்ட அத்தியாயத்தை நாம் மறந்து விட வேண்டும்’’ என்றார்.

உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் ஜாபர்யாப் ஜிலானி கூறுகையில், ‘‘இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். எங்களில் பலர் இந்த வழக்கில் சாட்சிகளாக உள்ளனர். நான் உட்பட. எனவே, இதில் யார் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால், முஸ்லிம் தனிநபர் வாரியமும் ஒரு மனுதாரராக வழக்கில் இருக்கும்’’ என்றார். வாரியத்தின் மற்றொரு உறுப்பினர் பிரங்கி மஹாலி கூறுகையில், ‘‘ஒருவர் குற்றவாளியா? இல்லையா? என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது, முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து இது குறித்து பேசி மேல்முறையீடு செய்வது குறித்து ஒருமித்த முடிவை எடுக்கும்,’’ என்றார். அதே சமயம், அயோத்தி நில விவகாரத்தில் முக்கிய மனுதாரரான இக்பால் அன்சாரி சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

சிபிஐ மேல்முறையீடு செய்யுமா?
தீர்ப்பு குறித்து சிபிஐ தரப்பு வக்கீல் லலித் சிங் கூறுகையில், ‘‘தீர்ப்பு விவரங்கள், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதைத் தொடர்ந்து எங்கள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி மேல்முறையீடு செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும்,’’ என்றார்.

இடிக்கப்பட்டது மாய மந்திரமா?
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாசுதீன் ஓவைசி கூறுகையில், ‘‘சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு, இந்துத்துவா மற்றும் அதன் சித்தாத்தங்களை பின்பற்றுபவர்களை திருப்திபடுத்துகிறது. இந்த விவகாரத்தில் எதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை என நீதிமன்றம் கூறியது ஆச்சரியர் அளிக்கிறது. அப்படியென்றால், மசூதி இடிக்கப்பட்டது என்ன மாய மந்திரமா? அங்கு மக்கள் ஒன்று திரள அழைப்பு விடுத்தது யார்? அங்கு உள்ளே நுழைவதை உறுதி செய்தவர்கள் யார்? சிபிஐ தனது சுதந்திரத்தை உறுதி செய்ய இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்,’’ என்றார்.

மேல்முறையீடு செய்ய வேண்டும்
காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில், ‘‘பாபர் மசூதி இடிப்பு சட்ட விதிமீறல் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், அரசியலமைப்புக்கும் எதிரானது. அரசியலமைப்பிலும், இனவாத நட்பு மற்றும் சகோதரத்துவ உணர்விலும் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு இந்தியரும் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள்,’’ என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் அளித்த பேட்டியில், ‘‘தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இது இயற்கை நீதி கொள்கைகளுக்கு எதிரானது.’’ என்றார்.

1528 முதல் 2020 வரை
* 1528ம் ஆண்டு முகாலய மன்னர் பாபரின் கட்டளையின்பேரில் தளபதி மிர் பாகி என்பவர் பாபர் மசூதியை கட்டினார்.
* 1885ம் ஆண்டு மகந்த்ராகுபிர் தாஸ் சர்ச்சைக்குரிய இடத்தின் வெளியே ஒரு விதானம் அமைப்பதற்கு அனுமதி கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிமன்றம் நிராகரித்தது.
* 1949 ம் ஆண்டு சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள குவிமாடத்தில் ராம் லல்லாவின் சிலைகள் வைக்கப்பட்டன.
* 1950ம் ஆண்டு ராம் லல்லாவின் சிலைகளை வழிபாடு செய்வதற்கு அனுமதிக்க கோரி கோபால் சிம்லா விஷாரத், பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
* தொடர்ந்து வழிபாடு நடத்தவும், சிலைகளை வைக்கவும் அனுமதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்தார்.
* 1959ம் ஆண்டு அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என உரிமை கோடி நிர்மோஹி அகாரா என்ற இந்து சாதுக்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
* 1961ம் ஆண்டு உத்தரப்பிரதேச மத்திய வக்பு வாரியம் இடத்திற்கு உரிமை கோரி வழக்கு போட்டது.
* 1986ம் ஆண்டு இந்து பக்தர்களுக்காக இடத்தை திறந்துவிடும்படி உள்ளூர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
* 1989ம் ஆண்டு சர்ச்சைக்குரிய இடத்தை பராமரிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
* 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
* மசூதியை இடித்தது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒன்றில், மசூதியை இடித்த அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்றொன்றில். மசூதியை இடிப்பதற்கு முன்பாக வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜ தலைவர் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் இதர தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
* 1993ம் ஆண்டு அக்டோபர் சதி திட்டம் தீட்டியதாக அத்வானி, மற்றவர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
* 2001ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அத்வானி, ஜோஷி, உமாபாரதி, பால் தாக்கரே மற்றும் மற்றவர்களை வழக்கில் இருந்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.
* 2002ம் ஆண்டு தொழில்நுட்ப அடிப்படையில் பாஜ தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிடப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
* 2010ம் ஆண்டு மே மாதம் சிபிஐ சீராய்வு மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
* 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2:1 என்ற பெரும்பான்மையில் சர்ச்சைக்குரிய இடத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லாவிற்கு பிரித்து கொடுப்பதற்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
* 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சிபிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
* 2011ம் ஆண்டு மே மாதம் அயோத்தி நிலம் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
* 2017ம் ஆண்டு மார்ச் மாதம் மசூதி இடிப்பு வழக்கில் பாஜ தலைவர்களுக்கு எதிரான சதி குற்றச்சாட்டை மறுஆய்வு செய்ய பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
* அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான பிரச்னையை தீர்ப்பதற்காக புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்படி உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
* பாபர் மசூதி இடிப்பு சதியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
* 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய மொத்த இடத்தையும் ராம் லல்லா அறக்கட்டளைக்கு வழங்கும்படியும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து தரும்படியும் உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
* 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் மோடி பூமி பூஜை செய்து, அடிக்கல்லை நாட்டினார்.
* 2020ம் ஆண்டு செப். 30ம் தேதி லக்னோ சிபிஐ சிறப்பு  நீதிமன்ற நீதிபதி எஸ்கே யாதவ், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பு கூறினார்.



Tags : All ,Babri Masjid ,Advani , All released, including Advani, in Babri Masjid demolition case: n ‘No strong evidence against accused’
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...