×

விரிவான விசாரணை தேவை: கனிமம் எடுப்பதற்கான டெண்டருக்கு இடைகாலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:  தருமபுரி மாவட்டத்தில் கனிமங்களை எடுப்பதற்கான டெண்டரில் தமிழக அரசு இறுதி செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திமுக முன்னாள் எம்.பி. தாமரை செல்வன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுவில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம், காரி மங்களம், பாப்பிரேட்டிப்பட்டி, மற்றும் அரூர் உள்ளிட்ட இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பில் விதிகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளார்.

கருப்பு கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற விதி மீறப்பட்டிருப்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். எனவே தமிழக அரசு வெளியிட்டுள்ள டெண்டருக்கு தடைவிதித்து விதிமுறைகளின் கீழ் புதிய டெண்டரை வெளியிடக் கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் தடை விதிக்க வேண்டுமென்று வாதிட்டார்.

 இதனையடுத்து அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் டெண்டர் எடுப்பவர்கள் சுற்றுசூழல் உள்ளிட்ட 6 அனுமதிகளை பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாகவும், இதில் விதி மீறல் ஏதும் இல்லை என்றும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் டெண்டரை இறுதி செய்யக்கூடாது என கூறி இடைகாலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழக்கு விசாரணையானது அடுத்த வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



Tags : Chennai High Court ,stay , Detailed inquiry required: Chennai High Court orders interim stay on tender for mineral extraction!
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...