×

சின்னசேலம் அருகே நில பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தற்கொலை முயற்சி: சப்-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி,:நிலப்பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கும் நில பிரச்னை இருந்து வருகிறது. இவர்கள் இருவரது பெயரில் கூட்டுபட்டா உள்ளதாக கூறப்படுகிறது. நிலத்துக்கு உரிய ஆவணங்கள் கந்தசாமியிடம் உள்ளதாம். அதனால் ரவி பெயரில் உள்ள நிலத்தை கூட்டுபட்டாவில் இருந்து நீக்குவதற்கு வருவாய் துறை அதிகாரிகளிடம் கந்தசாமி முறையிட்டுள்ளார்.

ஆனால், அந்த நிலம் எனக்கு சொந்தமானது என கூறி ரவி எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.இந்நிலையில் நேற்று காவல்துறை பாதுகாப்புடன் வருவாய் துறை அதிகாரிகள், அந்த இடத்தை அளவீடு செய்தனர். அதற்கு ரவி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையும் மீறி வருவாய் துறையினர் அளவீடு செய்ததால் ரவி, தனது குடும்பத்தினருடன் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதனால் நில அளவீடு பணிகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரவி (45), அவரது குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் (26), ராமாய் (65), மேகலா (28), தனக்கோடி (23), யோகேஷ் (3), பரணி (1), ஹர்த்திக் (3), தாரணி (1) உள்பட 10 பேர் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி, கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றனர்.தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசார் சென்று தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பின்னர் ரவி உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : suicide ,Chinnasalem , Chinnasalem, land issue, suicide, attempt
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை