×

ஆண்டியப்பனூர் நீர்தேக்க கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் திறக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் நீர்தேக்க கால்வாய்களை சீரமைத்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் கிராமத்தில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் ஆண்டியப்பனூர் நீர்தேக்க அணை, கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த அணைக்கு அருகே உள்ள ஜவ்வாது மலையில் பகுதியில் பெய்யும் மழையால் மழைநீர் ஆண்டியப்பனூர் அணை நீர் தேக்கத்தில் தேங்கி நிரம்பும்.

அவ்வாறு தேங்கும் தண்ணீரை 13 ஆண்டுகளாக விவசாயிகளின் பயன்பாட்டுக்கு அரசு திறக்கவில்லை. மேலும், தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆண்டியப்பனூர் நீர்தேக்கத்தில் 75 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளது. மேலும், 3 மீட்டரில் நீர்தேக்கம் முழுவதுமாக நிரம்பும் தருவாயில் உள்ளது.  அவ்வாறு நிரம்பினால், உபரி நீர் குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடப்பள்ளி, கம்பளிகுப்பம், முத்தம்பட்டி, பசலிகுட்டை உள்ளிட்ட 9 ஏரிகளுக்கு இந்த தண்ணீர் சென்று சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள்.  தற்போது, ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் அனைத்தும் புதர் மண்டி செடிகள் முளைத்துள்ளது. மேலும், பல ஏரிகளின் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு மற்றும் செடிகள் முளைத்து இருக்கும் ஏரிக்கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏரி கால்வாய்கள் தூர் வாரப்படும். அதன்படி, இந்த நீர்தேக்க கால்வாய்களும் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் சீரமைக்கவில்லை. அதனையும் விரைவில் சீரமைக்கப்படும்.

மேலும், இந்த நீர்தேக்கம் கடந்த 13 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளதாக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆண்டியப்பனூர் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீர் தேவைபடுமேயானால், நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாராக உள்ளனர். இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட விவசாயிகள் தெரிவித்து, அதன்பிறகு கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படும். பின்னர், சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டும் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தி ஏரி கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Andiyapanur , Farmers, Demand, Tirupathur
× RELATED ஆண்டியப்பனூர் அணையில் ஆய்வு ₹4.6...