×

நீட் தேர்வு எழுதும் மாணவிகளிடம் தாலி, கம்மல் உள்ளிட்ட ஆபரணங்களை கழற்ற சொல்வது சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

சென்னை:  நீட் தேர்வின்போது தாலி, கம்மல் உள்ளிட்ட ஆபரணங்களை அகற்றும் விதிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரவிந்த் ராஜ் என்பவர் இந்த பொதுநல வழக்கினை தொடுத்துள்ளார். அதில், நாடு முழுவதும் 2017ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்களுக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு நடத்தபட்டு வருகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் அணிந்துவரும் ஆபரணங்கள் மற்றும் வாட்ச், பர்ஸ் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல கடுமையான தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த கடுமையான கட்டுப்பாடுகளால் மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர், என்று வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள், பாரம்பரியத்தின் புனிதமாக கருதும் தாலி, மெட்டி, கம்மல், மற்றும் மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி வற்புறுத்தப்படுகின்றனர். தற்போது நடைபெற்ற  தேர்வில்கூட திருமணமாகி 4 மாதங்களே ஆன ஒரு பெண்ணிடமிருந்து தாலி, மெட்டி உள்ளிட்டவற்றை அகற்றியுள்ளனர். இவை பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இதனால் தேர்வெழுதுபவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொடர்ந்து, தேர்வறையில், கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என்பதால், இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்கவேண்டும் என்றும், அதேநேரத்தில் ஆபரணங்களை அகற்றும்படி மாணவிகளை நிர்ப்பந்திக்ககூடாது எனவும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடவேண்டுமெனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : High Court ,Kammal ,Tali , Need selection, students, thali, kammal, ornaments, high court, case
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...