×

ஆரணி பகுதிகளில் சேகரித்துக்கொண்டு கமண்டல நாகநதியில் மனித கழிவு கொட்டிய வாகனம் சிறைபிடிப்பு

ஆரணி: ஆரணி பகுதிகளில் சேகரிக்கப்படும் மனிதக்கழிவுகளை கமண்டல நாகநதியில் கொட்டிய வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி நகராட்சியில், பாதாள சாக்கடை வசதி இல்லாததால் வீடுகளில் சேரும் கழிவுநீர், மனிதக்கழிவுகள் தொட்டி நிரம்பியதும், கழிவுநீர் வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். அதேபோல், கழிவுகளை, சுத்திகரிப்பு நிலையத்தில் கட்டணம் செலுத்தி விடுவது அல்லது விவசாயிகள் விருப்பத்தின் பேரில் நிலத்திற்கு கொண்டு சென்றுவிடுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆரணி டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் மனிதக்கழிவுகள், கழிவுநீர் போன்றவை, தனியார் கழிவுநீர் வாகனங்களில் கொண்டு சென்று, புத்திர காமேட்டீஸ்வரர் கோயில் அருகே கமண்டல நாகநதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, கமண்டல நாகநதியில் மனிதக்கழிவுகளை கொட்டும் கழிவுநீர் வாகனங்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியும், எச்சரித்தும் அனுப்பி வந்தனர். இந்நிலையில், நேற்று ஆரணி டவுன் பகுதியில் இருந்து கழிவுநீர் வாகனத்தில் மனிதக்கழிவுகளை கொண்டு வந்து, கமண்டல நாகநதியில் கொட்டிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், மனிதக்கழிவுகளை இங்கு கொட்டக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், கழிவுகளை ஆற்றில் கொட்டவிடாமல் வாகனத்தையும், டிரைவரையும் சிறைபிடித்தனர். பின்னர், நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பலமணி நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து, மனிதக்கழிவுகளை ஆற்றில் கொட்டவிடாமல் டிரைவரை எச்சரித்து, வாகனத்தை திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாழாகும் நிலத்தடி நீர்

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ஆரணி நகராட்சியில் 5 இடங்களில் தொடங்கப்பட்ட, நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் தொட்டியில் குப்பைகளை கொட்டாமல் ஆற்றில் கொட்டி குப்பைக்கிடங்காக மாற்றியுள்ளனர். தற்போது, வீடுகளில் சேகரிக்கும் மனிதக்கழிவுகளையும், கழிவுநீரையும் ஆற்றில் கொட்டி வருவதால் கழிவுநீர் தேங்கி நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : areas ,Arani , Arani, waste dump vehicle, captivity
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்