அம்மையப்பரை வலம் வந்து விநாயகர் கனி பெற்ற திருவலம்: உபகரணங்கள் இல்லாத அரசு மருத்துவமனை

திருவலத்தில் வரலாற்று சிறப்புமிக்க தனுமத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோயில் உள்ளது. பழமைவாய்ந்த இத்திருத்தலம் பல்வேறு சிறப்புகளை பெற்றது. திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற திருத்தலம்.

விநாயகபெருமான் அம்மை, அப்பனை வலம் வந்து மாங்கனியை பெற்ற வரலாற்று நிகழ்வு நடைபெற்ற சிவத்தலமானதால் வரலாற்றில் ‘திருவல்லம்’ எனும் பெயரானது காலப்போக்கில் ‘திருவலம்’ என பெயர் அமைந்தது என்பர்.

காட்பாடி தாலுகாவில் அமைந்துள்ள திருவலம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டுள்ளது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. சுமார் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. அடுத்தபடியாக நெசவுத்தொழில் உள்ளது. சுமார் 250 குடும்பத்தினர் நெசவுத்தொழிலை நம்பியுள்ளனர். பட்டு, கைத்தறிப்புடவை, லுங்கி, துப்பட்டா நெய்து வருகின்றனர். இதில் பட்டு சேலைகள், ஆரணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். சேவூர் மத்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட மக்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

திருவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால், சாலையை கடந்து ஆபத்தான நிலையில் எதிரே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று குடிநீர் பிடித்து வரவேண்டியுள்ளது. அதேபோல் பள்ளி சுற்றுசுவர் இடிந்து விழுந்து பல மாதங்களாகியும் சீரமைக்கவில்லை. திருவலம் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் ஸ்கேன், டெஸ்ட் எடுக்க சென்றால், மருத்துவ உபகரணங்கள் பழுதாகி கிடக்கிறது என்று வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் ஆஸ்துமா, மூச்சுதிணறல், கார்டீயாலஜி டெஸ்ட், இசிஜி போன்ற பரிசோதனை செய்வதில்லை, போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லை.அதோடு மருத்துவமனை கட்டிடம் மழைக்காலங்களில் மழைநீர்கசிவு ஏற்படுவதால், அச்சத்துடனே பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே மருத்துவமனை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். போதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கி, மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். மேலும் பெருகி வரும் மக்கள் தொகையால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம் திருவலம் பஜார் வீதியில் சாலையோரங்களில் 5 அடி வரையில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. பைக் பார்க்கிங் ஏரியாவாக மாறிவிட்டது. எனவே ஆக்கிமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பின் பிடியில் கெம்பராஜபுரம் ஏரி

திருவலத்தில் உள்ள கெம்பராஜபுரம் ஏரியானது சுமார் 80 ஹெக்டேருக்கு மேல் உள்ளது. இந்த ஏரி சுமார் 5 ஏக்கர் வரையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரக்கனின் உடல்கள் விழுந்த இடம் ஊர்களானது

திருவலம் திருத்தல வரலாற்றிலும் இடம் பெற்றுள்ள ‘காஞ்சனகிரி’ எனும் இம்மலை திருவலத்திலிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. கஞ்சன்கிரி மலையிலிருந்து வில்வநாதீஸ்வரர் கோயில் அர்ச்சகர் மூலவரின் திருமஞ்சனத்திற்காக தீர்த்தம் கொண்டு வருவது வழக்கம். கஞ்சன்கிரி உச்சியில் திருக்குளம் உள்ளது. பளிங்கு போன்ற தெளிந்த அத்தீம் புனலை தெண்ணிலா மலர்ந்த சிவபெருமானுக்கு திருமஞ்சனம் செய்ய திருக்குடத்தில் எடுத்தார். அப்போது தேவர், முனிவர், அசுரர் ஆகியோரின் ஆசியில் ‘அழிவு வராத வரம்’ பெற்று கஞ்சனகிரி மலையை தன் வசப்படுத்திக்கொண்டான் கஞ்சன் என்ற அரக்கன். அர்ச்சகர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய நீரை தமது எல்லையிலிருந்து எடுக்க கூடாது என்று துன்புறுத்தினான். இறைவனுக்கு வழிபாடு என்றாலே ஜலமும், பூவும் தானே என்று, அர்ச்சகர் சிவபெருமானை வேண்டினார். அர்ச்சகரின் வேண்டுதல் சிவபெருமானின் வாகனமான நந்தி பெருமானுக்கு திருவுளக்குறிப்பு கிடைக்கவே கஞ்சனகிரி நோக்கி சென்று கஞ்சனுடன் போரிட்டார். பெரும் போரில் கஞ்சனது படைகள் தறிகெட்டு ஓடின.

நந்தி பெருமான் தமது கூரிய கொம்புகளால் கஞ்சனை குத்தி தூக்கி எறிந்தார். போரில் கஞ்சனின் உடல் சிதறுண்டு குருதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆணவச்செருக்கு ஒழிந்த கஞ்சன் நந்திபெருமானின் மலரடிகளை பணிந்தான். அவனது வேண்டுகோள் படி அம்மலை காஞ்சனகிரி என பெயர் பெற்றதாக வரலாறு. அவன் சிந்திய இரத்தம் முதலான தாதுக்களும் சிவலிங்கங்களாக (சுயம்பு வடிவினவாக) மாறின. பின்பு அவனுக்கு சிவபெருமான் முக்தியளித்தார். மாற்று திசையில் ஓடிக்கொண்டிருந்த நதியை சிவபெருமான் ‘நீவா’ என அழைத்தார். நதியும் கோயில் திருமதிலடுத்து ஓடி வந்ததால் நதிக்கு ‘நீவாநதி’ என பெயர் பெற்றது.

கஞ்சனின் உடல் பகுதிகள் விழுந்த இடங்கள் எல்லாம் இப்போது ஊர்களாக உள்ளன. அவை இலாடம் (கபாலத்தில் உள்ள நெற்றிப்பகுதி) விழுந்த இடம் இலாடப்பேட்டை தற்போது இலாலாப்பேட்டை எனவும். சிரசு விழுந்த இடம் சீக்கராஜபுரம் எனவும், மார்புப்பகுதி விழுந்த இடம் மருதம்பாக்கம் எனவும், மணிக்கட்டு விழுந்த இடம் மணியம்பட்டு எனவும், குடல் முதலான பகுதிகள் விழுந்த இடம் குகையநெல்லூர். நரம்பு விழுந்த இடம் நரசிங்கபுரம் எனவும் நடைமுறையில் உள்ளது.

கஞ்சனுடன் போரிட சென்ற திருக்கோலம் காரணமாகவே நந்திபெருமான் இத்திருத்தலத்தில் கிழக்கு நோக்கியவாறு எழுந்தருளியுள்ளார். நந்தியபெருமானும், கஞ்சனும் போரிட்ட காட்சிகள் இத்திருத்தலத்தில் உள்ள கல்தூண் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது.

சர்க்கிள் ஸ்டேஷனை மதர் ஸ்டேஷனாக மாற்றணும்

காட்பாடி போலீஸ் ஸ்டேஷனை தலைமையிடமாகக்கொண்டு, திருவலம், விருதம்பட்டு சர்க்கிள் ஸ்டேஷனாக இயங்கி வருகிறது. காட்பாடியில் இருந்து விருதம்பட்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், ஏதேனும் பிரச்னைகள் என்றால் உடடியாக இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு செல்ல முடியும். ஆனால், திருவலத்தில் பிரச்னைகள் இருந்தால் இன்ஸ்பெக்டர் 15 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதோடு இன்ஸ்பெக்டர் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொலைதூரம் காரணமாக சில போலீசார் தன்னிச்சையான முடிவு எடுப்பதாக புகார்கள் உள்ளது. எனவே திருவலத்தினை மதர் ஸ்டேஷனாக தரம் உயர்த்தி, இன்ஸ்பெக்டரை நியமிக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>