×

சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகம்: மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்குமா? பெற்றோர் அதிர்ச்சி

நெல்லை: பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்களில் தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தைவிட மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் குறைந்த சதவீதத்தில் மதிப்பெண் பெற்று உள்ளதால் தரமான கல்லூரியில் இடம் பிடிப்பதில் கடும் சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டு உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் குறிப்பாக பொறியியல் கல்வியில் சேருவதற்கு மாநில பாட திட்டத்தில் பிளஸ்2 படித்த மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத நிலையில் கடும் போட்டியை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதற்கு மாணவர்கள் எடுத்த மதிப்பெண் சதவீதம் முக்கிய காரணமாக உள்ளது. சிபிஎஸ்இ பாட திட்டத்தில் பயின்ற மாணவர்கள், தேர்ச்சி சதவீத அடிப்படையிலும் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையிலும் மிகவும் முன்னணியில் உள்ளனர்.

 இதன்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 38 ஆயிரத்து 230 மாணவர்களில் 37 ஆயிரத்து 200 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.3 சதவீத தேர்ச்சி ஆகும். இதில் ஆயிரம் மாணவர்கள் 95 சதவீதத்திற்கும்மேல் மதிப்பெண் பெற்றவர்கள் ஆவர். கடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்பிஇ பாட திட்டத்தில் 95 சதவீத மதிப்பெண்ணுக்குமேல் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கையை விட இது 119 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களும் அதிகமாக உள்ளனர்.

அதே நேரத்தில் மாநில பாடத்திட்டத்தில் இந்தாண்டு 7 லட்சத்து 79 ஆயிரத்து 931 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்களில் 7லட்சத்து 20 ஆயிரத்து 209 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இது 92.3 சதவீத தேர்ச்சி ஆகும். ஆனாலும் இந்த 7 லட்சம் மாணவர்களில் அறிவியல் சார்ந்த பாடங்களில் 95 சதவீதத்திற்கும் மேல் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ளது. இது வெறும் 0.085 சதவீதம் ஆகும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்கு இணையாக மாநில பாட திட்ட மாணவர்களின் தேர்வு முடிவுகளும் அமைந்து இருந்தால் சுமார் 19 ஆயிரத்து 400 மாணவர்கள் 95 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பர்.

இந்த காரணங்களால் தமிழ்நாடு பாட திட்ட மாணவர்கள் இந்தாண்டு பொறியியல் சேர்க்கையில் இடம் பிடிப்பதில் கடும் போட்டியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் தங்களுக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முதலிடத்தில் உள்ள 15 தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் இடம் பிடிக்க கடும் போட்டி இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த இக்கட்டான நிலையால் பல மாணவர்கள் மற்றும் பெற்றோர் மன உளைச்சலில் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1995ல் சட்ட போராட்டம்

இதுகுறித்து கல்வி ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு மாநில பாடத்திட்ட மாணவர்களைவிட சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து அவர்களுக்கு உயர்கல்விகளான மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் முன்னுரிமை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது தமிழக கல்வித்துறை நீதிமன்றத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்று சட்டப்போராட்டம் நடத்தினர். அதில் ஓரளவு நிவாரணமும் கிடைத்தது. தற்போதைய சூழலில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கொரோனா தடை காரணமாக 3 பாடங்களில் இரண்டு பாடங்களை எழுதாத நிலை ஏற்பட்டவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சலுகை வழங்கியதாக தெரிகிறது.

இதுபோல் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாடத்திட்ட வால்யும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு உள்ளதைவிட குறைவாக உள்ளது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிளஸ்1 பொதுத்தேர்வு என்ற மன அழுத்தமும் இல்லை. இதுபோன்ற கல்வி வேறுபாடுகளை மீறி மாநில பாடத்திட்ட மாணவர்கள் மதிப்பெண் சராசரியில் சாதிக்கும் நிலை உள்ளது. எனவே வரும் ஆண்டுகளிலாவது பாடத்திட்டம், கற்பித்தல், தேர்வு என அனைத்திலும் ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை கொண்டு வந்தால் சராசரி அளவில் அனைத்து தகுதியான மாணவர்களும் தங்கள் விருப்ப உயர்கல்வியை விருப்ப கல்வி நிறுவனத்தில் கற்கும் வாய்ப்பு போட்டியின்றி கிடைக்கும் என்றனர்.

Tags : state curriculum students ,CBSE ,colleges , CBSE, Engineering Study
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை