×

கோயில்களின் வருமானத்தில் முறைகேடு புகார் எதிரொலி: சென்னையில் நடமாடும் தணிக்கை குழு அதிகாரி நியமனம்

* தலைமை தணிக்கை அலுவலர் திடீர் மாற்றம்
* தமிழக அரசு உத்தரவு

சென்னை: கோயில்களின் வரவு, செலவு விவரங்களை தணிக்கை செய்வதில் அலட்சியம், முறைகேடு  புகார் எழுந்ததை தொடர்ந்து, தலைமை தணிக்கை அலுவலர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். மேலும், சென்னையில் நடமாடும் தணிக்கை குழுவுக்கு புதிதாக அதிகாரி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்து சமய அறநிலையத்துறையில் 44,120 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமான வீடு, கடை வாடகை மூலமும், பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை தான் முக்கிய வருவாய். இது கோயில் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது செலவு ெதாடர்பாக  3 மாதங்களுக்கு ஒருமுறை தணிக்கை செய்ய வேண்டும். ஆனால், காலிபணியிடம் காரணமாக 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல கோயில்களில் தணிக்கை செய்யப்படுவதில்லை.

இதை பயன்படுத்திக் கொண்டு ஊழியர்கள் வரவு-செலவு பதிவேடுகளில் முறையாக விவரங்களை பதிவிடுவதில்லை. மாறாக, கோடிக்கணக்கில் கோயில் உண்டியல் பணத்தை கையாடல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டன. ஆனால் யாரும் சிக்கவில்லை. சென்னையில் உள்ள கோயில்களில் புகார்கள் வந்தால் மட்டும் நடமாடும் தணிக்கை குழு நேரில் ஆய்வு செய்யும்.  ஆனால், நடமாடும் தணிக்கை குழுவில் காலி பணியிடம் காரணமாக அக் குழு ஆய்வுக்கு செல்லவில்லை. இதனால் கோயில்களின் வருமானத்தில் முறைகேடு நடப்பது தொடர் கதையாகி வந்தது.

இந்நிலையில் சென்னையில் நடமாடும் தணிக்கை குழு மண்டல தணிக்கை அலுவலராக ஈஸ்வரனை நியமனம் செய்து அறநிலையத்துறை செயலாளர் விக்ரம் கபூர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தலைமை தணிக்கை அலுவலராக இருந்த லட்சுமி என்பவருக்கு பதிலாக இளங்கோவன் (நிதித்துறை இணை செயலாளர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, பதவி உயர்வின் அடிப்படையில், திருவேற்காடு உதவி தணிக்கை அலுவலர் வெங்கடேஷ் பழனி  மண்டல தணிக்கை  அலுவலராகவும்,  திருத்தணி உதவி தணிக்கை அலுவலர் ஸ்வர்ணா திருவேற்காடு மண்டல தணிக்கை அலுவலர், வேலூர் உதவி தணிக்கை அலுவலர் தமிழரசி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் முதுநிலை தணிக்கை அலுவலர், திருவேற்காடு மண்டல தணிக்கை அலுவலர் சேலம் மண்டல தணிக்கை அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இனி வருங்காலங்களில் கோயில்களில் தணிக்கை செய்யும் பணியை தீவிரப்படுத்துவார்கள் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Echo ,Temples ,Mobile Audit Committee Officer ,Chennai , Echo of Complaints of Income in Temples: Appointment of Mobile Audit Committee Officer in Chennai
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு