×

பூந்தமல்லி ஊராட்சிகளில் எம்எல்ஏ திடீர் ஆய்வு: காட்டுப்பாக்கத்தில் முறையாக அமைக்காத மழைநீர் கால்வாய்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவு

பூந்தமல்லி: பூந்தமல்லி தொகுதி (திமுக) எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, காட்டுப்பாக்கம் உள்பட 5 ஊராட்சிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பூந்தமல்லி தொகுதியின் பல்வேறு ஊராட்சிகளில் சாலைவசதி, கழிவுநீர், மழைநீர் கால்வாய் வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, கிராமம் கிராமமாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
அதன் ஒரு பகுதியாக, பூந்தமல்லி ஒன்றியத்தில் உள்ள காட்டுப்பாக்கம், கண்ணடபாளையம், பாணவேடு தோட்டம், கோலப்பன்சேரி, காவல் சேரி ஆகிய ஊராட்சிகளில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் அதிகாரிகளுடன்  நேற்று ஆய்வு செய்தனர்.

காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அரசு கட்டி கொடுத்து  இடிந்து விழும் நிலையில் இருந்த 97 தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தனர். இதில் 17 வீடுகள் புதிதாக கட்டப்படுகின்றன. மீதமுள்ள 80 வீடுகளை சீரமைத்து புதுவீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். பிஜி அவென்யூவில் கட்டப்பட்டு இருந்த மழைநீர் கால்வாய், முறையாக கட்டப்படாமல் இருந்தது. அதில், ஒரு சொட்டு மழைநீர் செல்ல வழியில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் கடும் சிரமம் அடைவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவை சேர்ந்தவர் பூந்தமல்லி ஒன்றிய குழு தலைவராக இருந்தார்.

அவரது மகன், காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். அவர்களது திட்டத்தின்படிதான் இந்த மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாயால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியதோடு மட்டுமின்றி, முறையாக கட்டவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது என சரமாரியாக புகார் கூறினர். இதையடுத்து அந்த கால்வாயை கட்டிய ஒப்பந்ததாரருக்கு, உடனடியாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, அம்மன் நகர், செந்தூர்புரம் ரோடு, பிஜி அவென்யூ உள்பட பல பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர். அவற்றை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எம்எல்ஏ, பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள காரிய மேடை கட்டி 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், அதனை இதுவரை பயன்படுத்தப்படாமல் ஊராட்சி மன்ற பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தனர். அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணி, தேவி உள்பட பலர் உடனிருந்தனர்.


Tags : raids ,MLA ,Poonamallee ,forest , MLA raids Poonamallee panchayats: Improperly constructed rainwater canal in forest reserve
× RELATED தங்கக்கடத்தல் தொடர்பாக கேரளாவில் 5...