சூப்பர் ஓவரில் அசத்திய சைனி: கோஹ்லி பாராட்டு

நடப்பு சாம்பியன் மும்பை அணியுடனான  லீக் போட்டியில் பெங்களூர் அணி பரபரப்பான சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. ஆர்சிபி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய மும்பை அணியும் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்ததால் ஆட்டம் சரிசமனில் முடிந்தது. இஷான் கிஷன் 99 ரன் (58 பந்து, 2 பவுண்டரி, 9 சிக்சர்), போலார்டு 60* ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர். இதைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. சைனி வீசிய ஓவரில் மும்பை 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன் எடுத்தது. மும்பை சார்பில் பூம்ரா பந்துவீச, ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 11 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

இது குறித்து ஆர்சிபி கேப்டன் கோஹ்லி கூறியதாவது: சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த ஆட்டம் ரோலர்-கோஸ்டர் விளையாட்டு போல் இருந்தது. அவர்கள் 2வது இன்னிங்சின் நடுவில் பொறுமையாகவும், சிறப்பாகவும் விளையாடினர். அதனால் நாங்கள் கீழே செல்ல நேர்ந்தது. மீண்டும் மேலே வர முயற்சித்தோம். வெற்றிக்கான சிறிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. சூப்பர் ஓவரில் களமிறங்கும் 2 சிறந்த வீரர்கள் யார் என்று யோசித்தோம். அது நானும், டி வில்லியர்சும் தான். பும்ராவுக்கு எதிராக நல்ல போட்டியை தர முடிந்தது. இதுபோன்ற தரமான போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

ஆரம்பத்தில் பவர் பிளேயின் போது வாஷிங்டன் சுந்தர் சிறப்பாகப் பந்து வீசினார். குர்கீரத்துக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில்  பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.  அதிலும் சூப்பர் ஓவரை நவ்தீப் சைனி மிகச்சிறப்பாக வீசினார். பந்துகளை யார்க்கர்களாகவும், வைடுகளாகவும் வீசியது நல்ல பலனை கொடுத்தது. இந்த வெற்றி  முன்னோக்கி செல்வதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.

ஏன் இஷான் இல்லை? ரோகித் விளக்கம்

சூப்பர் ஓவரில் மும்பை தரப்பில் அசத்தலாக விளையாடிய இஷான் கிஷனும், போலார்டும் களமிறங்குவார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஹர்திக் பாண்டியாவும், போலார்டும் களம் கண்டனர். போலார்டு ஆட்டமிழந்த பிறகும் இஷான் உள்ளே வரவில்லை. ரோகித் ஷர்மா விளையாட வந்தார். ஏன் இஷானை இறக்கவில்லை என்பது குறித்து ரோகித் கூறுகையில், ‘இது சிறந்த ஆட்டம். நாங்கள் பேட்டிங் செய்ய தொடங்கியதும் ஆட்டம் எங்கள் கையில் இல்லை.

ஆனால், வெற்றி நம்பிக்கையை திரும்பப் பெற இஷானின் சிறப்பான ஆட்டம் உதவியது.  வழக்கம் போல் போலார்டு புத்திசாலித்தனமாக விளையாடினார். சூப்பர் ஓவரில் இஷானை அனுப்ப நினைத்தோம். ஆனால், அவர் மிகவும் சோர்வாக இருந்தார். ஹர்திக் அதிரடியாக விளாசுவார் என்று நம்பினோம். ஆனால் அது நடக்கவில்லை’ என்றார்.

Related Stories:

>