×

எல்லை கட்டுப்பாடு கோடு விவகாரத்தில் 1959ன் நிலைப்பாட்டை பின்பற்றும் சீனாவின் கூற்று ஏற்க முடியாதது: நிராகரித்தது வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: ‘எல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரத்தில் ஒருதலைப்பட்சமான 1959ம் ஆண்டு நிலைப்பாட்டை பின்பற்றுவதாக கூறும் சீனாவின் கூற்றை ஏற்க முடியாது,’ என மத்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.  கிழக்கு லடாக் சீன எல்லையில் கடந்த 5 மாதமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் அடிக்கடி சீன ராணுவம் தன்னிச்சையாக தனது நிலையை மாற்ற அத்துமீறுகிறது.  இது தொடர்பாக இருநாட்டு ராணுவ தரப்பில் 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டு போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரத்தில் 1959ம் ஆண்டு நிலைப்பாட்டை பின்பற்றுவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

கடந்த 1959ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி அப்போதைய சீன அதிபர் என்லாய், பிரதமர் ஜவகர்லால் நேருக்கு எழுதிய கடிதத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு குறித்து சில பரிந்துரைகள் கூறி இருந்தார். இப்போதும் அதுதான் சீனாவின் நிலைப்பாடு என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவத்சவா நேற்று பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘1959ம் ஆண்டில் ஒருதலைப்பட்சமாக வரையறுக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு கோட்டை, இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லை பிரச்னை தொடர்பாக இரு தரப்பு இடையே 1993, 1996 மற்றும் 2005ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், ஒரே ஒரு எல்லைக் கட்டுப்பாடு கோடு வரையறை மட்டுமே இருப்பதாக சீனா தற்போது கூறுவது, மேற்கண்ட ஒப்பந்தங்களில் சீனா செய்துள்ள உறுதியான கடமைகளுக்கு முரணானது. இந்தியா எப்போதும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை மதிக்கிறது, பின்பற்றுகிறது. அதே சமயம் சீனா கூறும் 1959 எல்லைக் கட்டுப்பாடு கோடு நிலைப்பாடு என்பது ஏற்க முடியாதது,’’ என்றார்.

லடாக் எல்லையில் யுத்தமும் இல்லை அமைதியும் இல்லை
இந்திய விமான தொழில்துறை தொடர்பான மாநாடு, டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு விமானப்படை தளபதி பதவுரியா பேசுகையில், ‘‘லடாக் எல்லையில் நடந்த அத்துமீறலுக்கு இந்திய விமானப்படை வேகமாக, உடனடி பதிலடி கொடுத்துள்ளது. இப்பகுதியில் எந்த துஷ்பிரயோகம் நடந்தாலும், அதற்கு பதிலடி கொடுப்பதற்கு விமானப்படை தயார்நிலையில் உள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் யுத்தமும் இல்லை; அமைதியும் இல்லை. ஆனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. விமானப்படைக்கு ஏற்கனவே சி-17 குளோப்மாஸ்டர் விமானம், சினுாக் மற்றும் அப்பாச்சி ரக போர் ெஹலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.

இவற்றுடன் சமீபத்தில் வாங்கப்பட்ட ரபேல் போர் விமானமும் இணைக்கப்பட்டு இருப்பது, விமானப்படையின் பலத்தை அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் நடக்கப் போகும் எந்த போரிலும், நமது ராணுவத்தின் வெற்றிக்கு விமானப்படையின் பலம் மிக முக்கிய பங்காற்றும். அதற்கேற்ற வகையில், நமது எதிரிகளை விட சிறந்த தொழில்நுட்பங்களை நாம் பெற வேண்டியது மிகவும் அவசியம்,’’ என்றார்.


Tags : China ,Foreign Ministry , China's claim of following 1959 position on Line of Control is unacceptable: Foreign Ministry rejects
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்