×

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை எதிரொலி

சென்னை: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் இன்று அளிக்க உள்ளது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக அயோத்தியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கின் தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் இன்று அளிக்கிறது. எனவே, தீர்ப்பு வெளியாகும் போது கலவரங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதைதொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

அந்த அறிக்கையில், பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பின் போது பிரச்னைகள் ஏற்படும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்றும், பொது இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, திருநெல்வேலி உட்பட 37 மாவட்டங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி திரிபாதி உத்தரவிடப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கோயில் மற்றும் மசூதிகள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி 12 காவல் மாவட்டங்களில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், பொழுது போக்கு பூங்காக்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் சுற்றி வந்தால் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : Babri Masjid , Today's verdict in Babri Masjid demolition case: Heavy police security across Tamil Nadu: Union Home Ministry echoes warning
× RELATED பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம்...