×

ஆளுநர் மாளிகை, தலைமை செயலகத்தில் ‘மெகா’ ஊழல்: தினக்கூலிகளை நியமிக்காமல் லட்சக்கணக்கில் கையாடல்; பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: ஆளுநர் மாளிகை, தலைமை செயலகத்தில் தினக்கூலி ஊழியர்களை நியமிக்காமலேயே, நியமித்துள்ளதாக லட்சக்கணக்கில் நிதியை சுருட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான அமைப்பின் கீழ் எலக்ட்ரிக்கல் பிரிவு உள்ளது. இதன் மூலம் பல்வேறு அரசு துறைகளின் கட்டிடங்களில் எலக்ட்ரிக்கல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளப்பட்டு வுருகிறது. இந்த எலக்ட்ரிக்கல் பிரிவின் கீழ் ரேடியோ உபகோட்டங்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதில், சென்னையில் ரேடியோ உபகோட்டம் மூலம் தலைமை செயலகம், உயர் நீதிமன்றம், ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பல அலுவலகங்களில் தினக்கூலி ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டரங்கில் நடக்கும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்துக்கு தேவைப்படும் மைக், ஸ்பீக்கர் வைத்து தருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது, ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை சரி செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த ஊழியர்களுக்கு மாதம் ரூ.12,400 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2018-19 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் 5 பேர் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், ஆளுநர் மாளிகையில் 2 பேர், அமைச்சர் குடியிருப்பில் 2 பேர், நீதிபதி குடியிருப்பில் ஒருவர், எழிலகத்தில் ஒருவர், சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் ஒருவர் வேலை செய்ததாக கூறி கூடுதலாக கணக்கு காட்டி சம்பளம் முறைகேடாக சுருட்டப்பட்டுள்ளது. இதில் 2018-19 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் தலைமை செயலகத்தில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம், உயர் நீதிமன்றத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை எடுக்கப்பட்டதாக கூப்படுகிறது.

உயர் நீதிமன்றத்தில் தினக்கூலி பணியாளர் ஒருவர் கூட இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த 2018-19ல் எழும்பூர் நீதிமன்றத்தில் ரூ.10 லட்சத்தில் கூட்டரங்கிற்கு மைக் பொருத்த வேண்டும் எனக்கூறி வேலை செய்யாமலேயே அந்த பணத்தை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் உரிய விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Governor's House ,Secretariat ,millions , Governor's House, ‘mega’ corruption in the General Secretariat: manipulation of millions without appointing daily wages; Sensational information exposed
× RELATED சிறுமி கொலையை கண்டித்து தொடர்...