×

ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து போயஸ் கார்டனில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமையாக்கி நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்கு, அரசாணை கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சமீபத்தில் நினைவில்லமாக மாற்றுவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லமாக்கும் பணியை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் போயஸ் கார்டனில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலாளர் சங்கர் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது, நினைவு இல்லத்தை என்ன மாதிரியாக வடிவமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மேலும், ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள், அவரது புகைப்படம், அவர் கொண்டு வந்த திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை எங்கு வைப்பது என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, பல நாட்களாக பூட்டியே கிடப்பதால் வேதா இல்லம் முழுவதும் குப்பையாக இருந்தது. அதை சுத்தம் செய்வதற்காக பொதுப்பணித்துறை சார்பில் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அங்கு தேக்கு மரத்தில் செய்யப்பட்ட படிக்கட்டுகள், கதவுகளில் கரையான் அரிப்பை தடுக்க ஊழியர்கள் வார்னிஷ் அடித்தனர். இதை தொடர்ந்து வேதா இல்லத்தில் சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, முதல்வர் எடப்பாடியின் ஒப்புதலை பெற்று அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : home ,Jayalalithaa ,Boise Garden , Authorities raid Jayalalithaa's home in Boise Garden
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...