×

அதிமுகவில் மோதல் வலுக்கிறது எடப்பாடி கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிப்பு: ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருவதால் பரபரப்பு

சென்னை: துரோக குற்றச்சாட்டு கூறியதால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தார். அதோடு, தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வரும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதால் அதிமுகவில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் தற்போது உருவாகியுள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்த கடந்த 18ம் தேதி உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது.

அதில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார். இதற்கு உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு ‘‘11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை அமைக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த குழுதான் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும்’’ என்றார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகமும், இது என்ன ஜாதி கூட்டமா? ஒரு ஜாதிக்கு மட்டும் முதல்வர் பதவியா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். இதனால் முதல்வர் பதவி குறித்து முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.

இதற்கிடையில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்று பாஜ தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு கட்சியின் தலைமை கழகத்தில் நேற்று முன்தினம் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 283 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றியவுடன், திடீரென அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து, ‘‘முதல்வர் வேட்பாளர் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அவர் ஆரம்பித்து வைத்ததை, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், காமராஜ், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, செம்மலை ஆகியோர் வலியுறுத்தினர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

கூட்டத்தில் பேசிய அனைவருமே சொல்லி வைத்ததுபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அனைவருமே பேசினர். அப்போது மூத்த தலைவர் ஜெ.சி.டி.பிரபாகரன், ‘‘பொதுக்குழுவில் முடிவு எடுத்தபடி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும். அவர்கள் முதல்வரை தேர்வு செய்யட்டும். முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியைத் தவிர யாரும் போட்டியிட முன்வரவில்லை. இப்போது, அதை முடிவு செய்ய என்ன அவசரம்’’ என்றார். அவருக்கு ஆதரவாக பண்ருட்டி ராமச்சந்திரனும் பேசினர். இருவர் பேசும்போதும் மற்றவர்கள் கூச்சல் எழுப்பினர்.

இதற்கு ஆதரவாக வைத்திலிங்கம் பேசினார். கே.பி.முனுசாமி, பால்மனோஜ்பாண்டியன் ஆகியோர் நடுநிலை வகித்தனர். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவோடு நிர்வாகிகள் பிரச்னையை ஆரம்பித்து வைத்தனர். ஆனால் ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. ஆனால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்குத்தான் அதிக ஆதரவு இருந்தது. அந்த ஆதரவை வைத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கலாம். அப்படி செய்தால், ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தை புறக்கணிப்பார். இதனால் கட்சி மீண்டும் உடையும் நிலை உருவாகிவிடும் என்பதால் எடப்பாடி பழனிசாமி, அந்த முடிவை எடுக்கவில்லை.

இதனால் முடிவுகள் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.
இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது, மேலும் பல தளர்வுகளை அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதுவரை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக 8 ஆலோசனைக் கூட்டங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்துள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் மற்ற அமைச்சர்களுடன் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளார். ஆனால் நேற்றைய கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று புறக்கணித்தார்.

அதோடு தனது ஆதரவாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோருடன் ஆலோசனையை காலை 10.30 மணிக்குத் தொடங்கினார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை எப்படி சமாளிப்பது, முதல்வர் வேட்பாளரை உடனடியாக அறிவிக்காமல் தடுப்பது? கட்சியின் பொதுச் செயலாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அறிவிக்க வைப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதோடு, தங்களது முடிவுகளை எடப்பாடி பழனிசாமி கேட்காமல் செயல்பட்டால், பாஜ மேலிடத்துடன் ஆலோசனை நடத்தி, பலப்பரீட்சையை நடத்துவது என்று முடிவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் முன்னாள் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரும் ராமநாதபுரம் எம்எல்ஏவுமான மணிகண்டன் திடீரென்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி செல்வதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் திடீரென்று அந்த திட்டத்தை அவர் ரத்து செய்து விட்டார். வீட்டில் இருந்தபடியே தனது ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு பேசியபடியே இருந்தார். மாலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் சில எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் சந்திப்பதாக கதவல்கள் வெளியானதும் கிரீன்வேஸ் சாலையில் வீட்டு முன்பு கூட்டம் கூடியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் குவிக்கப்பட்டனர். அதேநேரத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேச துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் அனுமதி கிடைத்ததும் டெல்லி செல்ல பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளாராம். அப்போது நட்டாவையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தை புறக்கணித்து விட்டு தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருவது அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லத் தொடங்கியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோட்டையில் ஆலோசனைக் கூட்டத்தை முடித்தது விட்டு மாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அவரை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த நத்தம் விஸ்வநாதன் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் வேலுமணியும் சந்தித்துப் பேசினார். இரு தரப்பிலும் தொடர் ஆலோசனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    
* சாதி அரசியல்
அதிமுகவில் அமைச்சர்களும், மூத்த தலைவர்களும் சாதி ரீதியாக பிரிந்து செயல்படுவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வேண்டும் என்று, ெகாங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையன்தான் முதலில் அறிவித்தார். ஒரு காலத்தில் சசிகலாவின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்பட்ட செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்ததால், அவரைத் தொடர்ந்து தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஆதரித்துப் பேசினர். அதன்பின்னர் ஒரு சில மற்ற சமூக அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்தனர். தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள சமூக அமைச்சர்களும் ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசி வருகின்றனர். இதனால் அதிமுகவில் தற்போது சாதி ரீதியில் அமைச்சர்கள் பிரிந்திருப்பதாக கூறப்படுவதால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* கே.பி.முனுசாமி பாசம்
சசிகலாவுக்கு எதிரானவராக கருதப்படும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆரம்பத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். பின்னர் எம்பி பதவிக்காக நடுநிலை வகித்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒரு குவாரி உரிமை கே.பி.முனுசாமிக்கு வேண்டியவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவு நிலையை எடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தபோது, நீங்கள், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லை என்றால், என்னுடைய அரசியல் வாழ்வு முடிந்திருக்கும். உங்களால்தான் நான் மீண்டும் அரசியலில் இறங்கத் தொடங்கியுள்ளேன். இதனால் உங்களுக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருப்பேன் என்று உறுதியளித்தாராம். இது அதிமுக வட்டாரத்தில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Conflict ,AIADMK ,meeting ,Edappadi , Conflict intensifies in AIADMK: OPS boycotts Edappadi meeting
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...