×

உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி: நிலம் கையகப்படுத்துதல் ெதாடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில், புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது. அதனால், இவ்வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச்  சட்டத்தின்படி, நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான பிரிவு 24  (2)-இன் விளக்கம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய  அமர்வு முரண்பட்ட தீர்ப்புகள் வழங்கியது. அதையடுத்து, கடந்த மார்ச் 6ம் தேதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா,  இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா மற்றும் எஸ்.ரவீந்தர பட் ஆகியோர்  அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு, நிலம் கையகப்படுத்துதல் ெதாடர்பான வழக்கில் முக்கிய  தீர்ப்பை வழங்கியது.

அதில், ‘நிலம் கையகப்படுத்துதலில், நில உரிமையாளருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கும் வரை, நில எடுப்பு பணி முடிவு பெற்றதாக கருத  முடியாது. நிலம் கையகப்படுத்துதலின் போது, அதன் முழு பலன்களும், நில உரிமையாளர்களுக்கும், வேளாண் மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அரசு தரப்பில் நில எடுப்பை  முடிக்கவில்லை என்றாலும், உரிய இழப்பீடு வழங்காமல் இருந்தாலும், நிலம்  கையகப்படுத்துதல் என்பது ரத்து செய்யப்பட்டதாக கருத முடியும்’ என்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு அளித்து ஆறு மாதங்களான நிலையில், நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் கால அவகாசம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு மீண்டும் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, ‘அரசு நிலத்தை கையகப்படுத்தவோ அல்லது இழப்பீடு வழங்கவோ இல்லையென்றால், அந்த நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலமாக கருதப்படும். ேமலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீடு வழங்காவிட்டால், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த கூடாது’ என்று 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியுள்ளது. ஆனால், அரசு தரப்பில் கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீடு செலுத்த எவ்வளவு காலம் கொடுக்க முடியும் என்று, தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் அரசு தரப்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கிலும் ஆஜராகி வாதிடுகையில், ‘இழப்பீடு பணம் வழங்குதல் தாமதமானால், குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகைக்கு அபராத வட்டியும் சேர்த்து அரசு வழங்கும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களிலும் சுமார் 600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பின்படி இந்த வழக்குகள் இப்போது தீர்க்கலாம். எங்களுக்கு இரண்டு வாரம் கொடுங்கள். தனிப்பட்ட ஒரு வழக்கைப் பற்றி பேசவில்லை. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பைப் பற்றி பேசவேண்டும்’என்றார்.

அப்போது தலைமை நீதிபதி அமர்வு, ‘நிலம் கையகப்படுத்துதல் செயல்முறையைத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குள் நிலம் கையகப்படுத்தி முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. எனவே, நிலம் கையகப்படுத்திய ஐந்து ஆண்டுகளுக்குள் அரசு தரப்பில் இழப்பீடு வழங்கவில்லை என்றால், கையகப்படுத்திய நிலமானது காலியிடம் என்று கூற வேண்டுமா? எவ்வளவு நாள் நிலம் கொடுத்தவர் காத்திருக்க வேண்டும்? இவ்விஷயத்தில் நாடாளுமன்றம் கூட கவலைபடவில்லை’என்றது. மேலும்,‘மேற்கண்ட கேள்விகள் ஏற்கனவே விசாரித்து தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் கேட்கப்படாதவையாக உள்ளன. இழப்பீடு பணம் கொடுக்க காலவரையரை நிர்ணயம் இல்லாததால், அரசு தரப்பில் பணம் செலுத்துவதை தாமதிக்க அனுமதிக்க முடியுமா? என்பது குறித்தும் விசாரிக்கப்படும்’என்று, தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : session ,Supreme Court ,The Supreme Court , Major twist in land acquisition case as Supreme Court 5-judge bench rules: Supreme Court raises new questions and re-examines
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...