தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் இல்லை: குமரி மக்களவை தேர்தல் தேதி பின்னர் அறிவிப்பு...இந்திய தேர்தல் ஆணையம் தகவல்.!!!

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் தற்போதைக்கு இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிகிறது. பல்வேறு மாநிலங்களில் 64 சட்டமன்ற தொகுதி மற்றும் ஒரு  மக்களவை தொகுதி காலியாக உள்ளது. 65 தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறும்’ என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 5-ம் தேதி அறிவித்தது. இதற்கிடையே, கடந்த 25-ம் தேதி, பீகார்  மாநில சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக அக். 28, நவ. 3, நவ. 7ல் தேதிகளில் நடைபெறும். 65 தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

 65 சட்டமன்ற தொகுதிகளில் தமிழகத்தில் 3 சட்ட மன்ற தொகுதி, ஒரு மக்களவை தொகுதி காலியாக உள்ளது. திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி கடந்த பிப்ரவரி 27ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  அதுபோல, குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலம் பாதிக்கப்பட்டு  கடந்த பிப்ரவரி 28ம் தேதி காலமானார். திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த ஜூன் 10ம் தேதி கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். இதையடுத்து தமிழகத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. கடந்த 28ம் தேதி எச்.வசந்த்குமார் எம்பி உயிரிழந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவை  தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் விதிகளின்படி தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதியில் கடந்த ஆகஸ்டு மாதத்திற்குள் தேர்தல்  நடத்தி முடித்திருக்க வேண்டும். கொரோனா காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை. சட்டமன்ற ஆயுள்காலம் ஒரு வருடத்திற்கு குறைவாக இருந்தால் இடைத்தேர்தலை நடத்த வேண்டியதில்லை என்றும் விதி உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் கன்னியாகுமரி எம்பி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது இடைத்தேர்தல் இல்லை. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல்  ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என மாநிலங்கள் தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் 1 நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மணிப்பூரின் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெறும் என்றும் சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், நாகாலாந்து, ஒடிசா,  தெலுங்கானா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு இன்னும் 7 மாதங்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>