×

வாய்க்கால் நிரம்பியதால் 50 ஏக்கர் சம்பா பயிர் நீரில் மூழ்கியது: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வாய்க்கால் நிரம்பி விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்து 50 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் கருப்புக்கொடியுடன் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை அருகே அகரமணக்குடியில் செல்லும் கஞ்சாநகர வாய்க்கால் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்காலாக உள்ளது. 5 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் இந்த வாய்க்கால் மூலம் மணக்குடி, அகரமணக்குடி பகுதியில் வடிகால் வாய்க்காலாகவும், கஞ்சாநகரம் மற்றும் கருங்குயில் நாதன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் 1,000 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வாய்க்காலாகவும் செல்கிறது. இதில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை தூர்வாரப்பட்டு 2 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கஞ்சாநகரம் பாசன வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுமையாக வாய்க்காலில் செல்லமுடியாமல் வழிந்து அகர மணக்குடி கிராமத்தில் விளை நிலங்களில் புகுந்தது. இதனால் 50 ஏக்கரில் உள்ள நேரடி நெல் விதைப்பு சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. 5 நாட்களாக தண்ணீர் வடிய வழியில்லாததால் பயிர்கள் அழுகி விட்டது. இதுகுறித்து புகார் அளித்தும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை கண்டித்து விவசாயிகள் கருப்புக் கொடியுடன் தண்ணீர் சூழ்ந்த விவசாய நிலங்களில் நேற்று இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 100 ஏக்கர் வரை விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி கிடப்பதகாவும், உடனடியாக கஞ்சாநகர வாய்க்காலை முழுமையாக தூர்வாரி விவசாய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Tags : field , Farmers, struggle
× RELATED நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்