×

ஒழுங்காய் பாடுபடு வயல்காட்டில்...உயரும் உன் மதிப்பு சுடுகாட்டில்...

நன்றி குங்குமம்

தனியார்மயமாகும் விவசாயம்...மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்...

கடந்த வாரம் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே வேளாண் மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது மத்திய அரசு. பாஜக அரசில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளக் கட்சியைச் சேர்ந்த உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியில் இருந்து விலகியிருக்கிறார். ஏற்கனவே நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை ஆகியவற்றுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், விவசாயத்தைத் தனியார்மயமாக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது மத்திய அரசு. இந்த வேளாண் மசோதா மூன்று சட்டங்களை உள்ளடக்கியது. ஒன்று, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம். இரண்டாவது, விவசாய விளைபொருள் வர்த்தக சட்டம், மூன்றாவதாக, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம். இதற்கு நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ‘‘விவசாயத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முழு முயற்சிதான் இது...’’ என்கிறார் பொருளாதார நிபுணரான ஜெயரஞ்சன். ‘‘அத்தியாவசிய பொருட்கள் பட்டியல்ல உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை வருது.

இவற்றைப் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதைத் தடுப்பதற்காகவே அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், பலவிதமா வாங்கிக் குவிப்பதைத் தடுக்குற அதிகாரம் அரசு கையில் இருந்தது. ஆனா, இப்போதைய புது சட்டம் இதனை முற்றிலும் நீக்கிடுது. முந்தைய சட்டப்படி ஓர் அளவுக்கு மேல் ஒரு விளைபொருளை ஒரே இடத்துல இருப்பு வைக்க முடியாது. ஆனா, இப்போதைய சட்டப்படி 10 ஆயிரம் ஏக்கர் நெல்லை கொள்முதல் செஞ்சு ஒரே இடத்துல குவிக்க முடியும். இதைப் பத்திரப்படுத்த தேவையான குளிர்பதனக் கிடங்கை தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்து உருவாக்கும்னு அரசு சொல்லுது. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் கொண்டு போய் விற்பனை செய்யலாம். ஆக, அத்தியாவசியப் பொருட்கள் தனியார்வசமாகுது. அடுத்ததா, விளைபொருள் வர்த்தகச் சட்டம். இதன்படி விளைபொருளை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விற்பனை செய்துக்கலாம். தவிர, மாநில அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியே யும் பொருட்களை விற்கலாம். ஆனா, மாநில அரசின் சந்தைக் கட்டணத்தையும், வரியையும் கட்ட வேண்டியதில்லை. அதை இந்தச் சட்டம் தடை செய்திடுது. இதுக்கு முன்னாடி விவசாயி களுக்கு பயனளிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் இருந்தது. அதைப் பத்தி இந்த புது மசோதாவுல சொல்லப்படல.அதாவது, வேளாண் விளைபொருட்கள் ஒரே சமயத்துல அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தால், சந்தையில் பொருட்கள் அதிகமா குவிந்து விலை வீழ்ச்சியை சந்திக்கும்.

இதனால, விவசாயிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க உருவாக்கப்பட்டதுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை. விவசாயிகளுக்கு உண்டான செலவைக் கணக்கிட்டு அவர்களைப் பாதிக்காத வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயிக்கும். உதாரணத்துக்கு, ‘ஒரு மூட்டையை ரூ.500க்கு வாங்கிக்கிறேன்’னு அரசு கொள்முதல் நிலையத்தைத் திறந்து வச்சிருக்கும். ஒருவேளை இந்த ஐநூறு ரூபாயைவிட அதிக விலை கொடுக்க தனியார்கள் முன்வந்தால் அங்கபோய் விளைபொருட்களை வித்துக்கலாம். இல்ல, அரசு நிர்ணயிச்ச விலையைவிட குறைவுன்னா, அரசின் கொள்முதல் நிலையத்திலேயே கொடுக்கலாம். ஆக, அந்த விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைச்சிடும். எங்கேயும் பாதிக்கப்படமாட்டார். அதனாலதான் பலநேரங்கள்ல ‘இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்திக் கொடுங்க’னு விவசாயிகள் கோரிக்கை வைப்பாங்க. ஆனா யாரும், ‘எங்களை விட்டுருங்க. நாங்க தனியாரிடம் வித்துக்கிறோம்’னு சொன்னதேயில்ல. ஏன்னா, தனியார் இதைவிட அடிமாட்டுவிலைக்குதான் பொருட்களை வாங்குவாங்கனு அவங்களுக்குத் தெரியும். இப்ப தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலையும், அரசுக் கொள்முதலும் தொடரும்’னு சொல்றார். இதை மத்திய அரசும் சொல்லுது. ஆனா, அரசு சொல்வதில் எனக்கு நம்பிக்கையில்ல. காரணம், குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்கும்னு சொன்னா அது சட்டத்தின் ஒருபகுதியா இருக்கணுமா? இல்லையா? அப்படி இந்தச் சட்டத்துல இல்ல. மூன்றாவதா, இருக்குற விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம் பெரு நிறுவனங்களுக்கு ரொம்ப சாதகமானது.

பருவம் ஆரம்பிக்கும் முன்பே விவசாயிகள் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்துல கையெழுத்திடணும். அப்புறம், விளைபொருளை விளைவித்து ஒப்பந்தத்தில் போடப்பட்ட விலைக்கு அந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கணும். இதன்மூலம் விவசாயிகள் விலை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கப்படுவாங்கனு சொல்றாங்க.
 அதாவது, தக்காளியைக் குறிப்பிட்ட விலைக்கு எடுத்துக்கிறேன்னு ஒப்பந்தம் போட்டுட்டா, விலை வீழ்ந்தாலும் அதை அதே விலைக்கு நிறுவனங்கள் வாங்கிக்கணும். இதன்மூலம் விலை வீழ்ந்ததனால் தக்காளியை சாலையில் கொட்டினார்கள் என்ற செய்திகளெல்லாம் வராதுனு சொல்றாங்க.
ஆனா, அதுமாதிரி தனியார் நிறுவனங்கள் செய்யாது. மொத்தத்துல உள்ளூர் வியாபாரிகள் ஒன்று சேர்ந்து செய்ததை ஒழிக்கிறேன்னு சொல்லிட்டு இந்திய அளவிலான வியாபாரிகளை இறக்குறது தவறான முன்னுதாரணம். இந்திய வியாபாரிகளும், உலக வியாபாரிகளும் வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைதான் இது... இதை சமாளிக்க முடியாம விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அதிகரிக்கும்...’’ என்கிறார் ஜெயரஞ்சன். இதுகுறித்து, இயற்கை வேளாண் அறிஞரான பாமயன், ‘‘எப்படி தனியார்மயம் ஆக்கும்போது பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டி போட முடியாமல் தவித்ததோ அதேமாதிரி நேரடி கொள்முதல் நிலையங்கள் கார்ப்பரேட்டுடன் போட்டி போட முடியாமல் போகும். அப்ப அரசு கொள்முதல் நிலையங்கள் படுத்துக்கும். லாபம் இல்லாததால் அதை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்...’’ என ஆதங்கப்படுகிறார்.

‘‘இப்ப குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு கொடுக்குது. இதுவே ரொம்பக் குறைவுதான். இதையே உயர்த்திக் கொடுங்கனு போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, தனியார் நிறுவனங்கள் இதைவிட குறைஞ்ச விலைக்குதான் விளைபொருளை வாங்குவாங்க. ஒருபோதும் கூடுதல் விலை தரமாட்டாங்க. ஆனா, இதைவிட கூடுதலா விலை கிடைக்கும்னு ஆளும் அரசே நியாயப்படுத்துது. உதாரணத்துக்குச் சொல்றேன். ஒரு விளைபொருள் நிறைய உற்பத்தியாகி சந்தையில் குவிந்து கிடக்கும்போது தனியார் நிறுவனம் ரெண்டு நாட்கள் வாங்காமல் போட்டுருவாங்க. அப்புறம், அது அழுகும் நிலைக்கு போயிடும்னு விவசாயிகளே பயந்து விலையை குறைப்பாங்க. தனியார்வசம் போனால் இதுதான் நடக்கும். அடுத்து, விவசாயிகள் எங்க வேணாலும் போய் வித்துக்கலாம்னு சொல்றாங்க. இப்பவே சட்டம் அப்படித்தான் இருக்கு. ஒரு விவசாயி பத்து கிலோ நெல் உற்பத்தி செய்து இந்தியாவுக்குள்ள விற்கப் போனால் அரசியலமைப்பு சட்டப்படி தடை செய்ய முடியாது. முன்னாடி அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைச்சா அது சட்டப்படி குற்றம். ஆனா, இந்தச் சட்டம், எவ்வளவு வேண்டுமானாலும் பதுக்கி வைக்கலாம்; நினைச்ச நேரம் வெளியிடலாம்னு சொல்லுது. பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் இது சாதகம். இதனால், விவசாயிகளுக்கு எந்த உபயோகமும் இல்ல...’’ என்கிறார் பாமயன். தொடர்ந்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு விரோதமானது. இந்தச் சட்டத்தின் வழியே ஆன்லைன் வர்த்தகத்தை அனுமதிக்கிறாங்க. அதனால, விவசாயிகளின் அனைத்து சந்தை வசதிகளும் பறிபோகும். உரிய விலை கிடைக்காது.

ஒப்பந்த சாகுபடிங்கிற முறையில கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் ஒப்பந்தம்போட்டு சுரண்டுவாங்க. ஏற்கனவே, பல்வேறு மாநிலங்கள்ல இது பிரச்னையாகி காவல்துறைக்குப் போய்தான் ஒப்பந்தம் ரத்தாகியிருக்கு. கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்முதல் ஒப்பந்தம் போடுறபோது சொல்ற விலையை, அறுவடை பண்ற நேரத்துல கொடுக்குறதில்ல. கரும்பு சாகுபடி முறை இந்த ஒப்பந்த சாகுபடி முறையிலதான் ஓடிட்டு இருக்கு. அரசு அதிகாரிகள் நிர்ணயிக்கிற விலையைக்கூட கரும்பு ஆலைகள் கொடுக்குறதில்ல. அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசுகிட்ட கடுமையான சட்டங்களும் இல்ல. இப்படி பலவாறு பிரச்னைகள் இருக்கு. இதுவரை குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசுதான் நிர்ணயம் பண்ணிட்டு இருக்கு. ஆனா, இந்தச்சட்டம் மூலம் அரசு அதைக் கைவிட்டிருச்சு. அப்ப கொள்முதலுக்கான உத்தரவாதம் கிடையாது. இந்திய உணவுக் கழகம் இதுவரை கொள்முதல் பண்ணிட்டு இருக்கு. இனி அந்நிறுவனம் கொள்முதல் பண்ணும் என்பதற்கான சரத்தும் அதில் இல்ல. இன்னும் சொல்லணுமனா, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறாங்க. அப்ப என்னாகும்னா, அவங்க குறிப்பிட்ட காலத்துக்குள் விவசாயிகளின் நிலங்களை எல்லாம் அபகரிச்சிடுவாங்க. எல்லாத்தையும் தனியார்கிட்ட கொடுத்திட்டா அரசாங்கம் எதற்கு? இந்தச் சட்டத்தால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும், உழவர் சந்தைகளும் அடிபட்டுப் போயிடும். கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்தச் சந்தைகளைக் கைப்பற்றிடுவாங்க. அப்ப வேளாண் துறையே இருக்காது...’’ என வேதனை தெரிவித்ததுடன், ‘‘இந்தச் சட்டங்களை எதிர்த்து நாங்க முதல்கட்ட போராட்டத்தை முன்னெடுத்திருக்கோம். வர்ற அக்டோபர் 2ம் தேதி காந்தி பெற்றுக்கொடுத்த சுதந்திரம் பறிபோகுதுனு மறுசுதந்திரப் போராட்டத்தைத் தொடங்க இருக்கோம்...’’ என்றும் கூறுகிறார் பி.ஆர்.பாண்டியன்.

தொகுப்பு: பேராச்சி கண்ணன்


Tags : field , In the field of orderly labor ... In the rising fire of your value ...
× RELATED மாரநேரி கிராமத்தில் உழவர் வயல் தினவிழா