தேசிய நிர்வாகிகள் பட்டியலில் புறக்கணிப்பு எதிரொலி தமிழக பாஜ தலைவர் திடீர் டெல்லி பயணம்: ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச திட்டம்

சென்னை: பாஜ தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழக பாஜவினர் புறக்கணிப்பு எதிரொலியாக தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் திடீரென டெல்லி சென்றுள்ளார். அவர் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். பாஜ தேசிய நிர்வாகிகளின் புதிய பட்டியலை கடந்த 26ம் தேதி கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக பாஜவினர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டனர். கடந்த முறை தேசிய செயலாளர் பதவி எச்.ராஜாவுக்கு வழங்கப்பட்டது. அந்த பதவியும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பக்கத்து மாநிலமான கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா  ேபான்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தேசிய நிர்வாகிகளாக இருந்தால்தான் கட்சி தலைமையை எளிதில் அணுக முடியும். என்ன கோரிக்கை என்றாலும் தேசிய தலைவர், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து  பேசி தீர்வு காண முடியும். அப்படியிருக்கும் போது ஒரு பெரிய மாநிலத்தில் இருந்து ஒருவர் கூட நியமிக்கப்படாதது தமிழக பாஜ தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழக பாஜவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளது தமிழக பாஜவினரிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தமிழக பாஜவுக்குள் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் அவசரம், அவசரமாக டெல்லி சென்றுள்ளார்.

அங்கு அவர் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவரை பார்க்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சந்திக்க நேரம் ஒதுக்கியதும் சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. அப்போது தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழக பாஜவினர் புறக்கணிப்பு, வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்தும் அப்போது அவர் பேசுவார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், பிரபல நடிகை ஒருவர் பாஜவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுதொடர்பாகவும் பேசுவதற்காக அங்கு சென்றுள்ளதாகவும் பாஜவின் ஒரு பிரிவினர் கூறி வருகின்றனர். எது எப்படியோ தமிழக பாஜ தலைவர் திடீரென டெல்லி சென்ற சம்பவம் கட்சிக்குள் பரபரப்பாக ேபசப்பட்டு வருகிறது.

Related Stories:

>