×

பிஞ்ச், படிக்கல், டி வில்லியர்ஸ் அரை சதம் மும்பை இந்தியன்சுக்கு ஆர்சிபி 202 ரன் இலக்கு

துபாய்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 202 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆர்சிபி தொடக்க வீரர்களாக தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். படிக்கல் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியாக விளையாடிய பிஞ்ச் 31 பந்தில் அரை சதம் அடித்தார். பிஞ்ச் - படிக்கல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 81 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. பிஞ்ச் 52 ரன் (35 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி போல்ட் வேகத்தில் போலார்டு வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி 11 பந்துகளை சந்தித்து 3 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ராகுல் சாஹர் பந்துவீச்சில் ரோகித் வசம் கேட்ச் கொடுத்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதையடுத்து, படிக்கல்லுடன் டி வில்லியர்ஸ் இணைந்தார். இருவரும் அதிரடியில் இறங்க ஆர்சிபி ஸ்கோர் வேகம் எடுத்தது. படிக்கல் 54 ரன் (40 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி போல்ட் வேகத்தில் போலார்டு வசம் பிடிபட்டார். படிக்கல் - டி வில்லியர்ஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 17 ஓவர் முடிவில் ஆர்சிபி 154 ரன் எடுத்திருந்ததால், அந்த அணி 185 ரன் வரை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 4வது விக்கெட்டுக்கு டி வில்லியர்சுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் துபே சிக்சர்களாகப் பறக்க விட்டு மிரட்டினார். மறு முனையில் அபாரமாக விளையாடிய டி வில்லியர்ஸ் அரை சதம் விளாசினார்.

20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் என்ற பிரமாண்ட ஸ்கோரை எட்டியது. பேட்டின்சன் வீசிய கடைசி ஓவரில் 20 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. டி வில்லியர்ஸ் 55 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிவம் துபே 27 ரன்னுடன் (10 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் போல்ட் 2, ராகுல் சாஹர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித், டி காக் இருவரும் துரத்தலை தொடங்கினர். ரோகித் 8 ரன் எடுத்து சுந்தர் சுழலில் வெளியேறினார். அடுத்து வந்த சூரியகுமார் டக் அவுட்டாக, மும்பை 2.2 ஓவரில் 16 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

Tags : Padikkal ,de Villiers ,RCB 202 ,Mumbai Indians , Pinch, Padikkal, De Villiers half-century RCB 202 for Mumbai Indians
× RELATED அதிரடி வீரர்களின் ஆதிக்கத்தால் இந்த...