மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி சென்னை உள்பட 3 நகரங்களில் என்ஐஏ கிளை

புதுடெல்லி: சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் கிளைகளை அமைக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தீவிரவாதம், தேசப்பாதுகாப்பு தொடர்புடைய வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. கிளைகள் கவுகாத்தி, மும்பை, ஜம்மு காஷ்மீர், கொல்கத்தா, ஐதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர், சண்டீகர் ஆகிய இடங்களில் உள்ளன. இந்நிலையில், என்ஐஏ.வின் திறனை மேம்படுத்தும் வகையில் அதன் கிளைகளை சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை என்ஐஏ திறனை மேம்படுத்தும் என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு, பெங்களூருவில் என்ஐஏ கிளையை அமைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவும், பாஜவின் புதிய இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். பெங்களூரு தீவிரவாதிகளின் மையமாக மாறி வருவதாக தேஜஸ்வி கூறியிருந்தார். அதோடு, தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் என்ஐஏ அலுவலக கிளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, என்ஐஏ சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு தொடங்கப்பட்டது.

* 2019ல் இந்த அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

* கடந்த 2019ல் என்ஏஐ சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் மட்டுமின்றி இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய சொத்துக்கள் மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல், சைபர் தீவிரவாதம், ஆயுதம் மற்றும் மனிதக் கடத்தல் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்கும் வகையில் என்ஐஏ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

Related Stories:

>