×

மண்டல கால பூஜை சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் அனுமதி: வெளிமாநில பக்தர்களும் வரலாம்

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைக்கு சபரிமலையில் வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் உட்பட பக்தர்கள் அனைவரையும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்தார். கொரோனா பாதிப்பு தொடங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நவம்பர் மாதம் மண்டல காலம் தொடங்குகிறது. இதை ஒட்டி பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய நேற்று முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மண்டல காலம் முதல் பக்தர்களை அனுமதிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து இறுதி முடிவு எடுக்க தலைமை செயலாளர் ஜோஸ் மேத்தா தலைமையில் குழு அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின்னர் தேசவம் தலைவர் வாசு அளித்த பேட்டியில், ‘‘மண்டல காலத்தில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பமாக உள்ளது. முழுக்க முழுக்க ஆன்லைனில் முன் பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் வெளி மாநில பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

பக்தர்களை எப்படி தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். அதன்பின்னரே பக்தர்களை அனுமதிக்கும் விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

கொரோனா டெஸ்ட் கட்டாயம்

* கொரோனா நெகட்டீவ் சான்று உள்ள பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
* பழைய முறையில் நெய்யபிஷேகம் நடத்துவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
* சன்னிதானத்தில் பக்தர்கள் யாரும் தங்க அனுமதி இல்லை. அன்னதானம்
கட்டுப்படுத்தப்படும்.
* தலைமை செயலாளர் தலைமையிலான கமிட்டி அறிக்கை தாக்கல் செய்த பின்னர் ஐப்பசி மாத
பூஜைகளில் பக்தர்ளை அனுமதிக்கலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.



Tags : Zonal Puja ,Sabarimala ,Outstation devotees , Zonal Puja is allowed in Sabarimala with restrictions: Outstation devotees can also come
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு