×

கொரோனாவால் திரைப்பட தொழில் முடக்கம்; தெருத் தெருவாக மீன் விற்கும் துணை நடிகர்: திண்டுக்கல் அருகே பரிதாபம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்துள்ள என்.எஸ்.நகரை சேர்ந்தவர் மெய்யப்பன் (65). ஆட்டோ டிரைவரான இவர், சினிமா துறையில் மீதான ஆர்வம் காரணமாக 15 வருடங்களுக்கு முன்பு சென்ைன சென்றார். அங்கு கிடைத்த வாய்ப்பின் காரணமாக ரஜினிகாந்த்தின் சிவாஜி, வெண்ணிலா கபடி குழு, திட்டக்குடி, கோ, ஆயிரத்தில் ஒருவன், குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக நடித்தார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் வாழ்வாதாரம் இழந்த மெய்யப்பன், சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கே வந்தார். கொரோனா தடை காரணமாக ஆட்டோவும் ஓட்ட முடியவில்லை.

இதனால் மீன்கடை வைக்க முடிவு செய்தார். புதிதாக கடையை வாடகைக்கு பிடித்து தொழில் நடத்த வேண்டுமானால் அதிக செலவாகும். எனவே பழைய ஆட்டோ ஒன்றை குறைந்த விலைக்கு வாங்கினார். அதன் பாடியில் மாற்றம் செய்து, மீன்கடை போல் மாற்றினார். தற்போது தினமும் தெருத்தெருவாக சென்று மீன்விற்பனை செய்து வருகிறார். மாலை நேரத்தில் சிக்கன் மற்றும் மீன்களை பொறித்து விற்பனை செய்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘மீன்கடை மூலம் வரக்கூடிய வருமானத்தை வைத்து தற்போது குடும்பத்தை ஓட்டி வருகிறேன். இந்த வேலைக்கு எனது மகனை உதவிக்கு வைத்துள்ளதால் செலவு குறைவாக உள்ளது. மீண்டும் சினிமா சூட்டிங் தொடங்கிய பிறகே சென்னை செல்வது குறித்து முடிவெடுப்பேன்’’ என்றார்.

Tags : actor ,Corona ,street ,Dindigul , Film industry freeze by Corona; Supporting actor selling fish on the street: Awful near Dindigul
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...