×

தமிழகத்துக்கு தர வேண்டிய 4 டிஎம்சி நீர் பாக்கியை பெற முடிவு: கிருஷ்ணா நீர் இம்மாத இறுதியில் வருகிறது: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: தமிழகத்துக்கு தரவேண்டிய 4 டிஎம்சி கிருஷ்ணா நீர், இம்மாதம் இறுதியில் கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.  தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் ஆந்திர அரசு தர வேண்டும். அதன்படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி நீர் தர வேண்டும். இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணை காலம் தொடங்கிய நிலையில் கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி தண்ணீர் திறந்து விட ஆந்திர மறுத்து விட்டது. இது தொடர்பாக தமிழக அரசு, ஆந்திர  அரசுக்கு கடிதம் எழுதியும் உரிய பதில் அளிக்கவில்லை.இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மழை கொட்டி தீர்த்ததால், அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 18ம்  தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக 3231 மில்லியன் கன அடி கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்ததால் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை ஒரளவு பூர்த்தி செய்ய முடிந்தது.இந்த நிலையில் தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பதிவான நிலையில், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.  இதனால், கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீரை முழுவதுமாக சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் பொதுப்பணித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி கடிதம் ஒன்றை ஆந்திர நீர்வளத்துறைக்கு எழுதியது. இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை ஆந்திர அதிகாரிகள் நிறுத்தினார்கள். இந்த நிலையில்,   3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி நீர் மட்டம் 1111 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில் கோடைக்காலம் என்பதால் சென்னை மாநகரின் குடிநீருக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, கிருஷ்ணா நீரை பெற தமிழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  இதற்கிடையே கடந்தாண்டு பெய்த மழையில் கிருஷ்ணா கால்வாயில் ஊத்துக்கோட்டை முதல் பூண்டி ஏரி வரை உள்ள 25 கி.மீ தூரத்தில் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. முதற்கட்டமாக ரூ.28 கோடி செலவில் 6.2 கி.மீட்டருக்கு கால்வாய்  பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இப்பணி 50 சதவீத்துக்கு மேல் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.எனவே, கிருஷ்ணா நீர் திறக்க கோரி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ஆந்திர அரசிடம் கோரிக்கை வைக்கப்படவுள்ளது. 68 டிஎம்சி கொள்ளளவு ெகாண்ட கண்டலேறு அணையில் 46 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. எனவே, தமிழகத்துக்கு  ஆந்திர அரசு தண்ணீர் திறந்து விடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. எனவே, தமிழக அரசு கோரிக்கையின் பேரில் இம்மாத இறுதியில் கிருஷ்ணா நீர் திறக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….

The post தமிழகத்துக்கு தர வேண்டிய 4 டிஎம்சி நீர் பாக்கியை பெற முடிவு: கிருஷ்ணா நீர் இம்மாத இறுதியில் வருகிறது: பொதுப்பணித்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : 4 TMC water paki ,Tamil Nadu ,Krishna Water ,Chennai ,4 TMC ,Public Works Department ,Telugu Ganga ,Krishna ,Dinakaran ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...