×

இந்தியாவை ஆளுவது மோடியா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களா? : திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி

தண்டையார்பேட்டை: வேளாண் மசோதாவை கண்டித்து, திமுக கூட்டணி கட்சி சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் திமுக எம்எல்ஏக்கள், கூட்டணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்த ஆர்ப்பாட்டம், பாஜ அரசுக்கும்,  அதிமுக அரசுக்கும் சாவு மணி அடிப்பதாகும். பாஜ அரசு கடந்த 21ம் தேதிதான், விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் தமிழக அரசு கடந்த 17ம் தேதியே ஆதரவு தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சி என்று சொல்வதைவிட மோடி ஆட்சி என தமிழக அரசு மாற்றி கொள்ள வேண்டும்.
இந்த மசோதாவால் விவசாயிகள் மட்டுமல்ல, சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.  விலை பொருட்கள் பதுக்கலை நியாயப்படுத்தியுள்ளது பாஜ அரசு.  ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட  நாடாளுமன்ற உறப்பினர்கள் பேச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளை விவசாயத்தில் இருந்து வெளியேற்றி கார்ப்பரேட் கையில் கொடுக்க போகிறார்கள். இந்தியாவை ஆளுவது மோடியா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களா?

‘எதிர்க்கட்சிகள் சட்டத்தை படிக்காமல் பேசுகிறார்கள்’ என்று அமைச்சர் துரைக்கண்ணு கூறியுள்ளார்.  முதல்வர் பழனிச்சாமிக்கு தைரியம் இருந்தால்  ஒரே மேடையில் எங்களுடன் விவாதிக்க வாருங்கள், நாங்கள் தயாராக இருக்கிறோம்.  இன்று நடக்கும் அதிமுக செயற்குழு கூட்டத்தில்  என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோடிக்கு யார் காவடி தூக்குவது என்ற போட்டி நிலவி வருகிறது.
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசியதாவது: தமிழகத்தில்  மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி  தலைவர்கள் முன்னிலையில்  ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. விலை பொருட்களை பாதுகாக்க வேண்டிய அரசு, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் பெறுவதற்காக  செயல்பட்டு வருகிறது.  நானும் விவசாயிதான் என சொல்லி கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு என்ன செய்தார்.  இந்த சட்டத்தால் மக்களின் உணவு செலவு அதிகரிக்கும். ஆட்சி மாற வேண்டும். மத்திய அரசு  நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதா சட்டத்தை திரும்ப பெறும்வரை  போராட்டம் நடத்துவோம்.




Tags : Modi ,corporates ,Dayanidhimaran ,India ,DMK , Japan, actress, hanged, committed suicide...
× RELATED சொல்லிட்டாங்க…