×

கமுதி - கடலாடி சாலையில் கருவேல மரங்கள் இடையூறால் பொதுமக்கள் செல்ல அச்சம்

கமுதி: கமுதியில் இருந்து கடலாடி செல்லும் சாலை சேதமடைந்து கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். கமுதியில் இருந்து கடலாடி செல்லும் சாலை மிகவும் முக்கியமான சாலையாகும். கமுதியில் இருந்து சாயல்குடி செல்லும் சாலையில் கோவிலாங்குளத்தில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் கொம்பூதி,காத்தனேந்தல், ஆரைகுடி,பறையங்குளம், வேடங்கூட்டம், குமிலாங்குளம் போன்ற ஏராளமான கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கரிமூட்டம் போடும் தொழில் அதிகமானோர் செய்து வருகின்றனர். கோவிலாங்குளத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் கடலாடி சென்று விடலாம். முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி வழியாக சென்றால் அதிக தூரம் பயணிக்க வேண்டும். மிகவும் மோசமான இந்தச் சாலையில் பேருந்து போக்குவரத்து குறைவு என்பதால், இருசக்கர வாகனங்களில் அதிகமானோர் சென்று வருகின்றனர்.

மேலும் கரிமூட்டைகளை லாரிகளில் ஏற்றுக்கொண்டு சாலையைக் கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் தினமும் இச்சாலையை கடந்து செல்கின்றனர். குறுகலான இச்சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அடர்ந்து வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது. சேதமான இச்சாலை வருடக்கணக்கில் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

மேலும் இப்பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு மேல் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால், இருசக்கர வாகனங்களில் தனியாக வருபவர்கள் திருட்டு பயத்தில் மிகவும் அச்சப்படுகின்றனர். இப்பகுதில் காட்டுமாடுகள் தொந்தரவு உள்ளதாக கூறுகின்றனர். எனவே இச்சாலையின் அருகே உள்ள கருவேல மரங்களை அகற்றி சாலையை சீரமைத்து அகலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kamuthi ,public ,road , Kamuthi, road
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...