×

காற்றோடு கரைந்து போன மேலரசம்பட்டு அணை திட்டம்: அணைக்கட்டான ஆனை கட்டி

பண்டைய சோழர் காலத்தில் அப்போதிருந்தவர்கள் யானைகளை ஓரிடத்தில் கட்டி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். யானை சந்தை நடக்கும் நாட்களில் விற்கவில்லை என்றாலும், அங்கே கட்டி வைத்து அடுத்தடுத்த நாட்களில் விற்பனை செய்து வந்துள்ளனர். தொடர்ச்சியாக அங்கு யானைகளை கட்டி வைத்து விற்பனை செய்து வந்ததால், அந்த ஊர் யானைகள் கட்டி வைத்து விற்கும் ஊர் என்ற பொருள்படும் ஆனை கட்டி என அழைக்கப்பட்டு, அதுவே காலப்போக்கில் மருவி அணைக்கட்டு என்று மாறியதாக கூறப்படுகிறது.

தற்போது அணைக்கட்டு தாலுகாவில் 80 வருவாய் கிராமங்கள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2 லட்சத்து 22 ஆயிரத்து 996 பேர். கடந்த 2012ம் ஆண்டு வரை வேலூர் தாலுகாவில் இருந்த அணைக்கட்டு 2013ம் ஆண்டிற்கு பிறகு தனி தாலுகாவாக உதயமானது. 2012ம் ஆண்டு அப்போதிருந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அணைக்கட்டு தாலுகாவை வேலூரிலிருந்து பிரித்து தனி தாலுகாவாக அறிவித்தார்.
தற்போது அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்டு ஒரு ஒன்றியம், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா என இரண்டு பேரூராட்சிகள் உள்ளன.

அதேநேரத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்த, விவசாயத்தை நம்பிய ஒரு தாலுகாவாக இருப்பதாலும், அணைக்கட்டில் இருந்து 20 கிலோ மீட்டர்   தொலைவில் வேலூரும், ஆம்பூரும் இருப்பதால் தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு சென்று வேலை செய்யும் நிலையே இன்று வரை தொடர்ந்து வருகிறது. அதேபோல் மாட்டுச்சந்தைக்கு புகழ்பெற்ற பொய்கை மாட்டுச்சந்தையில், வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மாட்டை விற்கவும், வாங்கவும் ஆயிரக்கணக்கில் குவிகின்றனர். ஒரே நாளில் ரூ.5 கோடி வரை இங்கு வர்த்தகம் நடக்கும். இத்தகைய சந்தையில் போதுமான இடவசதி, அடிப்படை வசதிகள் இல்லாதது மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோல் வேலூர் மாவட்டத்தில் அதிக மலைகிராமங்கள் உள்ள ஒரே தாலுகா அணைக்கட்டு தாலுகா. குருமலை, வெள்ளக்கல்மலை, நச்சிமேடு, பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை, அல்லேரி என பல மலைகிராமங்கள் உள்ளன. இதில் 70க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. மலையில் வசிக்கும் மக்களின் நீண்டகால ஒரே கோரிக்கை மலையடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல தார்ச்சாலை வசதி வேண்டும் என்பது மட்டுமே. இதற்காக தொகுதி எம்எல்ஏவான நந்தகுமார் பல முறை சட்டமன்றத்தில் பேசியுள்ளார். முதன்மை செயலாளர், கலெக்டர் என சந்தித்து மனுக்களையும் அளித்துள்ளார். இருப்பினும் அரசு சாலை அமைக்கும் பணியை தொடங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இதுஒருபுறம் என்றால் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களான பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர், வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களின் குளங்களை சரியாக பராமரிக்காததால் அவற்றின் தொன்மை மறைந்து வருகிறது. அதேபோல் ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் கூடும் மலையின் உச்சியில் அமைந்துள்ள வெள்ளாண்டப்பன் மலைக்கோயிலை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் விருப்பமாக உள்ளது.

மற்றொரு அடிப்படை தேவையான மருத்துவமனையை பொறுத்தவரை அணைக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்ந்தும் மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் மட்டுமின்றி, போதுமான கட்டிடங்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் பெயருக்கு செயல்படும் மருத்துவமனையாக இது உள்ளது. இதனால் சாதாரண சிகிச்சைக்கும், பிரசவத்துக்கும் கூட வேலூருக்கு செல்ல வேண்டியுள்ளது என்கின்றனர் மக்கள்.

அதேபோல் பெயரிலேயே அணைக்கட்டை கொண்டிருந்தாலும் இந்த தாலுகாவில் எந்த அணையும் இல்லை. இக்குறையை போக்கவும், குடிநீர், விவசாய தேவைக்காகவும் கடந்த 2001-2006ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது மேலரசம்பட்டு அருகே உத்திரகாவேரி என்று அழைக்கபடும் மேல்மலையாற்றின் குறுக்கே 1,852 ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் ரூ.12.98 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை ஒன்று கட்டப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது.
ஆனால் பணி வெறும் ஆய்வுடன் நின்று போனது. ஏற்கனவே இருந்த எம்எல்ஏக்களும், தற்போதைய எம்எல்ஏ நந்தகுமாரும் பலமுறை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. நீதிமன்ற வழக்கு, நிதி ஒதுக்கீடு, வனத்துறை சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கால் மேலரசம்பட்டு அணை கட்டும் திட்டம் அறிவிப்போடு காற்றில் கரைந்து போன திட்டமாக மாறிப்போனதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் வேலூர் மாநகர் மட்டுமின்றி, மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்ட ஏறத்தாழ ரூ.1,200 கோடி மதிப்பிலான காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பயன் அணைக்கட்டு தாலுகாவுக்கு கிடைக்காத நிலையே உள்ளது. இத்திட்டத்தில் பின்னர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சில கிராமங்கள் சேர்க்கப்பட்டாலும், அணைக்கட்டு தாலுகா முழுமைக்கும் காவிரி குடிநீர் வேண்டும் என்று கேட்டு வருகின்றனர் இந்த தாலுகா மக்கள்.
இதுதவிர தாலுகா தலைநகர் என்ற அந்தஸ்தை பெற்ற அணைக்கட்டில் பேருந்து நிலையம் இல்லை. போதிய இடம் தேர்வாகாததால் பேருந்து நிலையம் வரவில்லை என்று கூறப்படுகிறது. படிப்படியாக வளர்ச்சியை நோக்கி செல்லும் அணைக்கட்டில் ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மேலும் அணைக்கட்டில் ஒவ்வொரு சனிக்கிழமையும் கூடும் வாரச்சந்தை போதிய இடவசதியின்றி சாலை ஓரத்தில் இயங்கி வருகிறது. அங்கு சந்தை வளாகம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

கிராமப்புறத்தில் வசிக்கும் ஏழை மாணவர்கள் குறிப்பாக பெண்கள், தங்கள் உயர்கல்வியை தொடர பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேலூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அணைக்கட்டு பகுதியில் அரசு கலை அறிவியல் கலைக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும்.இப்படி அடுக்கடுக்கான அடிப்படை தேவைகளுடன் பின்தங்கிய நிலையில் இருக்கும் அணைக்கட்டு தாலுகாவை மேம்படுத்துவதற்கான பலக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன், அதன் முதல்படியாக மேலரசம்பட்டு அணை திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Tags : Melarasampattu, dam project
× RELATED ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு...