×

வேலூரில் கஞ்சா கடத்தல், விற்பனை தாராளம்: காவல்துறையின் நடவடிக்கை கோரும் சமூக ஆர்வலர்கள்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகள், பள்ளி, கல்லூரி அருகில் உள்ள மறைவிடங்களில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. கஞ்சாவை பொறுத்தவரை அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்தே சமூக விரோதிகளால் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர் நகரில் சைதாப்பேட்டை மலையடிவார மறைவிடங்கள், பாலாற்றுப்படுகை பகுதிகள், சேண்பாக்கம், ரங்காபுரம், சார்பனாமேடு மலையடிவார மறைவிடங்கள், ஓல்டு டவுன், பாகாயம் என பரவலாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக அவ்வப்போது ஓரிருவர் கைது செய்யப்பட்டாலும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்ந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்எஸ்கே மானியம் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தொடர்ந்து தகவல் அளித்து வந்த கேமராமேன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது.

இந்த சம்பவத்தில் கேமராமேன் குறித்து போலீசாரே சம்பந்தப்பட்ட கஞ்சா ஆசாமிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும் அப்போது புகார் எழுந்தது. இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலையை ஒட்டியுள்ள ஜவ்வாது மலை கிராமங்களில் விவசாய நிலங்களில் ஊடுபயிராக கஞ்சா விளைவிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினமும் திருப்பத்தூர் அருகே போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கஞ்சா பயிரிட்ட விவசாயியை கைது செய்துள்ளனர். எனவே, மாவட்டத்தில் மிகவும் தாராளமாக நடமாடும் கஞ்சா உட்பட தடை செய்யப்பட்ட போதை பொருள் நடமாட்டத்தை தங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellore ,police action ,activists , Vellore, cannabis, sale
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...