குலசேகரத்தில் யாகம் நடத்துவதாக கூறி வசூல்: பணத்துடன் மந்திரவாதி ஓட்டம்

குலசேகரம் பகுதியை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கதக்க மந்திரவாதியை குடும்ப பிரச்னை, மனநலம் சம்பந்தமான பிரச்னைகளுக்காக ஏராளமான பெண்கள் சந்திக்க வருவார்கள். அப்படி வருபவர்களிடம் திருஷ்டி கழிப்பது, பூஜைகள் செய்வது என பல காரணங்களை கூறி பணம், நகைகளை பறிப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. பூஜைகளுக்கு பலி கொடுக்க ஆடு, கோழி, கன்றுகுட்டி என்று வாங்கி அவற்றை வேறு யாருக்காவது விற்பனை செய்து விடுவது இவரது வாடிக்கை. இந்த மந்திரவாதியின் சுயரூபம் தெரியாத வெளியூரை சேர்ந்த பலரும் தேடி வந்து பணம் பொருட்களை இழந்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நாகர்கோவிலை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரிடம் யாகம் நடத்துவதாக கூறி மந்திரவாதி பணத்துடன் சிறிய கன்றுகுட்டியும் வாங்கி உள்ளார். கன்றுகுட்டியின் கால்களில் கட்டி வைத்துள்ளார். ஆனால் வாக்குறுதி அளித்தபடி யாகமும், பூஜைகளும் நடைபெற வில்லை. இந்த நிலையில் மந்திரவாதியின் போலி தனத்தை தெரிந்து கொண்டு முக்கிய பிரமுகர் இவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினார். இதையடுத்து மந்திரவாதி கன்றுகுட்டியை அப்படியே விட்டு விட்டு இரவோடு இரவாக தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் பலி கொடுக்க வைத்திருந்த கன்று குட்டி இறந்து அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கால்கள் கட்டப்பட்ட நிலையில் கன்று குட்டி இறந்து கிடந்தது. எனவே கன்று குட்டியை மந்திரவாதி பலி கொடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். இருப்பினும் பயத்தால் யாரும் அதை அகற்றவில்லை.

இந்நிலையில் யாகத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் 2 நாட்களுக்கு முன்பு வந்து பார்த்த போது மந்திரவாதியை காணாததால் அவரது வீட்டுவாசலை சேதப்படுத்தினர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் குலசேகரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் துர்நாற்றம் வீசிய கன்று குட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தவில்லை. இதனால் பொது மக்கள் குலசேகரம் பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் போலீசாருடன் அங்கு சென்று இறந்து கிடந்த கன்றுகுட்டியை அப்புறப்படுத்தினர்.

Related Stories: