×

கடந்த வாரம் 9 பேர் கைதான நிலையில் அல்கொய்தாவின் 10வது தீவிரவாதி கைது : தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி

புதுடெல்லி, :கடந்த வாரம் அல்கொய்தா அமைப்பை சேர்ந்த 9 தீவிரவாதிகள் கைதான நிலையில், நேற்றிரவு அல்கொய்தாவின் 10வது தீவிரவாதியை மேற்குவங்கத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடியாக கைது செய்தது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதி சமீம் அன்சாரி என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்றிரவு கைது செய்தது. முர்ஷிதாபாத்தில் உள்ள ஜலங்கி காவல் நிலைய எல்லையில் உள்ள நந்த்பரா காளிகஞ்சில் வசிக்கும் சமீம் அன்சாரி, முர்ஷிதாபாத் நீதித்துறை அதிகாரி (சிஜேஎம்) முன் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். பின்னர், டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் மற்றும் மேற்குவங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து செப். 19ம் தேதி என்ஐஏ அமைப்பு, ஒன்பது அல்கொய்தா தீவிரவாதிகளை கைது செய்தது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட சமீம் அன்சாரி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் 10வது தீவிரவாதி. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘பயங்கர ஆயுதங்கள், துப்பாக்கிகள், உடல் கவசம், ஜிஹாதி இலக்கியம் மற்றும் வெடிபொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் குறிப்புகள் ஆகியன தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

டெல்லி, கொச்சி, மும்பை உட்பட பல இடங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர். கடந்த வாரம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அல்கொய்தா தீவிரவாதிகளால், சமூக ஊடகங்கள் மூலம் ஈர்க்கப்பட்டவர்கள். டெல்லி உட்பட பல இடங்களில் தாக்குதல்களை நடத்த, பாகிஸ்தான் அமைப்புகளால் தூண்டப்பட்டனர். இந்த நோக்கத்திற்காக, இந்தியாவில் பலரிடம் நிதி திரட்டி உள்ளனர். இந்த கும்பலின் உறுப்பினர்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்க டெல்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.



Tags : Al Qaeda ,arrests ,National Intelligence Agency , West Bengal, State, Law and Order, Affairs, Constitution, Boundary, Governor, Chief Minister, Mamata...
× RELATED தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக...