×

மொழி திணிப்பை எம்மால் ஏற்க இயலாது... ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் : அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

சென்னை : சென்னையில் நடந்து வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு...

தீர்மானம் - 1

பொது வாழ்வுப் பணிகளுக்கு இலக்கணமாக, கொரோனா நோய்த் தொற்று காலத்திலும் கண்துஞ்சாது கடமையாற்றி, மக்களின் துயர் துடைக்க அயராது அரும்பணி ஆற்றி வரும் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர், மாண்புமிகு அமைச்சர்கள்
மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டும்!
    
தீர்மானம் - 2

நாட்டிற்கே முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் கொரோனா நோய் எதிர்ப்புப் பணிகளையும், மருத்துவப் பணிகளையும், மறுவாழ்வுப் பணிகளையும், சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளையும்
சிறப்புடன் ஆற்றிவரும் தமிழ் நாடு அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றியும், பாராட்டும்; பத்திரிகை மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு நன்றியும், பாராட்டும்!
    
தீர்மானம் - 3

கழக அரசு மேற்கொண்டிருக்கும் சிறப்பான பணிகளின் விளைவாக  கொரோனா நோய்த் தொற்றிலிருந்தும், பொருளாதார சரிவிலிருந்தும்  மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதை ஏற்று, மத்திய அரசு  கொரோனா நிவாரணத்திற்கும், தடுப்பிற்கும் போதுமான நிதி ஆதாரத்தை தமிழ் நாட்டிற்கு வழங்க வலியுறுத்தல்!

தீர்மானம் - 4

தமிழ் நாடு அரசுக்கு, மத்திய அரசு தர வேண்டியுள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தல்
    
தீர்மானம் - 5

தமிழ் நாட்டில் கொரோனா காலத்திற்குப் பிந்தைய சூழலில்  பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட பொருளாதார வல்லுநர் திரு. சி. ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்ததற்கு, மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு !  திரு. சி. ரங்கராஜன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை,  அரசு விரைந்து நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பை வேண்டுதலும், தமிழ் நாடு அரசின் முயற்சிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்னும் உறுதிமொழியும் !    

தீர்மானம் - 6

தாய்மொழி - தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இணைப்பு மொழி என்ற இருமொழிக் கொள்கையே என்றென்றைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக் கொள்கை.  
எந்த மொழிக்கும் கழகம் எதிரானதல்ல; எந்த மொழியும் எம்மீது திணிக்கப்படுவதை எம்மால் ஏற்க இயலாது - என்ற கருத்தில் கழகம் உறுதியாய் இருக்கும்.

தீர்மானம் - 7

``நீட்’’ என்ற மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்திய பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து எதிர்க்கிறது.       

மாநிலங்களின் கல்வி உரிமையில் ``நீட்’’ தேர்வு மூலம் மத்திய அரசு தலையிடுவதாலும், கிராமப்புற, ஏழை, எளிய, முதல் தலைமுறை மாணாக்கர்கள் மருத்துவக் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாலும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாலும், ``நீட்’’ தேர்வு முறையைக் கைவிடுமாறு மத்திய அரசை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.     

தீர்மானம் - 8

பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளிகளில் பயின்றுவரும் மாணாக்கர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி இருக்கும் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களுக்கும், இதய தெய்வம் அம்மாவின் அரசுக்கும் நன்றியும், பாராட்டும் !
    
  தீர்மானம் - 9

தமிழ் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளில் முதற்கட்டமாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், அவற்றில் புதிதாக 1400 புதிய மருத்துவ பட்டப் படிப்பு இடங்களை உருவாக்கியும், இப்பொழுது 11 மாவட்டங்களில்  புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்தும், அடுத்துவரும் ஆண்டுகளில் புதிதாக 1650 மருத்துவ பட்டப் படிப்பு இடங்கள் உருவாகவும் வகை செய்திருக்கும் கழக அரசுக்கு நன்றியும், பாராட்டும்! மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்தமைக்குப் பாராட்டும், நன்றியும்!    

தீர்மானம் - 10

இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில்,  தென் மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த  அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல் !    

கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தக் கோரிக்கை !    

தீர்மானம் - 11

ஐ.    பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதிசெய்ய 1860-ஆம் ஆண்டைய இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கிட சட்டத் திருத்தங்கள் செய்யப்பட இருப்பதாக அறிவித்திருக்கும் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு !    

தீர்மானம் - 12

ஐ.    காவேரி (கட்டளை) - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 700 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  பணிகளை செய்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ள மாண்புமிகு  தமிழ் நாடு முதலமைச்சருக்கு நன்றியும், பாராட்டும்.    
ஐஐ.    விவசாயிகளின் நலன் கருதி, நடப்பாண்டில் 50 ஆயிரம் பம்புசெட்டுகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கியமைக்கு நன்றியும், பாராட்டும்!    

தீர்மானம் - 13

காவேரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்குக் கண்டனம்! மேகதாது அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்த உரிய நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் தமிழ் நாடு அரசுக்குப் பாராட்டு!
    
தீர்மானம் - 14

தமிழ் நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சர்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நினைவிடங்களை அழகுற அமைத்தமைக்கும், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றியமைக்கும் நன்றி !
    
தீர்மானம் - 15

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்ட சிந்தனையோடு, ஒற்றுமையாய் பணியாற்றி, தமிழ் நாட்டில் மீண்டும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,
புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் பொற்கால ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம், உழைப்போம் என்று சூளுரை!

Tags : executive committee ,AIADMK , OBS, Jayalalithaa, O Panneer Selvam, supporters, slogan...
× RELATED பாஜ நிர்வாகி மண்டை உடைப்பு; அதிமுக பிரமுகர் கைது